வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (30/06/2018)

கடைசி தொடர்பு:17:00 (30/06/2018)

மீத்தேன் திட்டத்தை எதிர்த்தவர் தேசத்துரோக வழக்கில் கைது!

ஜெயங்கொண்டத்தில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கொளஞ்சியை தேசத்துரோக வழக்கில் கைது செய்திருக்கிறது காவல்துறை.

கடலூர், சீர்காழி பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை முழுமையாக அமல்படுத்தும் வேலைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு எதிராக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும், இளைஞர்களும் வீதியில் வந்து போராட தொடங்கியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அருகேயுள்ள குருவாலப்பர்கோவில், வீரசோழபுரம், கரைமேடு உள்ளிட்ட 6 கிராமங்களில் ஓஎன்ஜிசி மூலம் மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணிகள் தயார் நிலையில் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் பாதிப்பதோடு விளைநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுத்தும் என்பதால் இத்திட்டத்தினை கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

                                    

இப்பிரச்னையைக் கையில் எடுத்துப் போராட பல இளைஞர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 20ம் தேதி மக்கள் அதிகாரம், சி.பி.எம்., சி.பி.ஐ. மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் கமிட்டி உருவாக்குவது பற்றி கூடிப் பேசியுள்ளனர். "அங்கு என்ன நடக்கிறது" என்று தகவல் சேகரிப்பதற்காக மஃப்டியில் கலந்து கொண்டது காவல்துறை. அப்போது, ஒருங்கிணைப்புக் கமிட்டியைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் இக்கூட்டமைப்பில் இருந்து மக்கள் அதிகாரத்தை வெளியேற்றுமாறு போலீஸார் மிரட்டியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த போலீஸார், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி கொளஞ்சி என்ற கதிரவனைக் கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அந்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லாததால், அவரது வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் அடித்து உடைத்திருக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அவர்கள் வீட்டின் அலமாரியில் இருந்த மீத்தேன் எதிர்ப்பு பிரசுரங்களை எடுத்துசென்றிருக்கிறார்கள்.

                                       

 

இந்நிலையில், கடந்த 22ம் தேதி மதியம் அவரது வீட்டில் குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த கொளஞ்சியை, 10-க்கும் மேற்பட்ட போலீஸார் சூழ்ந்து கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தவரை கையோடு இழுத்துச்சென்றுள்ளனர். எதிர்த்துக் கேட்ட ஊர்க்காரர்களையும், உறவினர்களையும் மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

                                     

இது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், “மக்களுக்காக போராடினால் நாங்கள் தேச துரோகிளா? அரசு கொண்டுவரும் திட்டங்களால் மக்களுக்கு ஆபத்து வரப்போகிறது என்று சொன்னால் நாங்கள் எதிரிகளா? இம்மாவட்டத்தில் ஆறு இடங்களில் ஓ.என்.ஜி.சி மூலமாக மீத்தேன் எடுக்க தயார் நிலையில் இருக்கிறார்கள். ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை எதிர்த்து பேசியது மட்டுமில்லாமல் நோட்டீஸ் வழங்கினார்,அத்தோடு  சில சமூக ஆர்வலர்களிடம் கொளஞ்சி பேசினார். இது எந்த விதத்தில் குற்றமாகும். இதனை குற்றமாக நினைத்து இவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என சொல்லி அவர்மீது, இந்திய தண்டனைச் சட்டம் 153A, 124A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது மத்திய, மாநில அரசு. மண்ணின் விடுதலைக்காக போராடுபவன் தேசத் துரோகி என்றால், நாங்கள் தேசத்துரோகியாகவே இருந்துட்டு போகிறோம்” என்று கொந்தளித்தனர்.