வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (30/06/2018)

கடைசி தொடர்பு:18:24 (30/06/2018)

`திருடத்தான் சென்றேன்; கமல் வீடு என்று தெரியாது' - சிக்கிக்கொண்ட கொள்ளையன் வாக்குமூலம்

கமல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்குள் நுழைந்தவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் நடிகர் கமல்ஹாசன் வீடு உள்ளது. இந்த வீடு, மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகமாகச் செயல்படுகிறது. இதனால், எப்போதும் போலீஸார் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதைத் தவிர தனியார் காவலாளிகளும் அங்கு உள்ளனர். இந்தநிலையில், இன்று சுற்றுச்சுவரில் ஏறிக் குதித்தவர், அலுவலகத்துக்குள் செல்ல முயன்றார். இதைப்பார்த்த காவலாளிகள் அவரை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க அந்த நபர் முயற்சி செய்தார். இருப்பினும் காவலாளிகளிடம் அவர் சிக்கிக் கொண்டார். 

தொடர்ந்து தேனாம்பேட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் கமல்ஹாசன் வீட்டுக்குள் நுழைய முயன்றவர், சபரிநாதன் என்றும் திட்டக்குடியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் கூறியதாவது `திருடத்தான் அங்குச் சென்றேன். ஆனால், அது கமல் வீடு என்று எனக்குத் தெரியாது' இவ்வாறு சபரிநாதன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.