`தண்ணீர் கேட்டேன்... குளிர்பானத்தைக் குடித்தேன்' - மெரினாவில் பெண்ணுக்கு நடந்த சோகம்

 தண்ணீர் கேட்ட இளம்பெண் இலக்கியா

``சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஒரு கடையில் தண்ணீர் கேட்டேன். அப்போது, அங்கு இருந்த குளிர்பானத்தைக் குடித்ததற்காக என்னைக் கடுமையாகத் தாக்கி விட்டனர்'' என்று கடலூர் பெண் கண்ணீர்மல்க போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 

கடலூரைச் சேர்ந்தவர் முருகன். இவரின் மனைவி இலக்கியா. இவர், நேற்று முன்தினம், மெரினா கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கடையில் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, கடைக்காரர் தண்ணீர் கொடுத்துள்ளார். ஆனால், இலக்கியா, தண்ணீர் குடிப்பதற்குப்பதிலாக அங்குள்ள குளிர்பானத்தைக் குடித்துவிட்டார். இதனால் கடைக்காரருக்கும் இலக்கியாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இலக்கியா மீது திருட்டுப் பட்டம் சுமத்திய அந்தப் பகுதியினர் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணாசதுக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இலக்கியாவை மீட்டனர். தொடர்ந்து, சமூக சேகவர் வெங்கடேஷ், சமூக சேவகிகள் காந்திமதி, கலையரசி மூலம் இலக்கியாவை, சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சியின் இரவு நேரக் காப்பக்கத்தில் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து வெங்கடேஷ் கூறுகையில்,`` கடலூரிலிருந்து சென்னைக்குப் பல் சிகிச்சைக்காக இலக்கியா வந்துள்ளார். அரசு பல் மருத்துவமனைக்கு வழிகேட்ட அவர், கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போதுதான் அவருக்குத் திருட்டுப்பட்டம் சுமத்தி சிலர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து இலக்கியாவை மீட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தோம். தற்போது, அவர் கடலூர் செல்வதாகக் கூறியதன்பேரில் ரயில் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்" என்றார். 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!