கடலூர் மத்திய சிறையில் டிஐஜி அதிரடிச் சோதனை! - கைதிகள் சதித்திட்டம் அம்பலம் | DIG inspects Cuddalore central Jail

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (30/06/2018)

கடைசி தொடர்பு:17:40 (30/06/2018)

கடலூர் மத்திய சிறையில் டிஐஜி அதிரடிச் சோதனை! - கைதிகள் சதித்திட்டம் அம்பலம்

புழல் சிறையில் கைதி கொலையின் எதிரொலியாக கடலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தலைமையில்
அதிரடி சோதனை  நடத்தினர். இந்த சோதனையில் கஞ்சா, சிம்கார்டுகள், செல்போன்கள் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மத்திய சிறை

கடலூர் கேப்பர்மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில்  700 க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 
அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகளிடம் அடிக்கடி கஞ்சா, செல்போன் என கைப்பற்றப்பட்டு அது சம்மந்தமாக 
சிறைத்துறையினர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது வாடிக்கை. தற்போது சென்னை புழல் சிறையில் பாக்ஸர் முரளி என்ற கைதி கொடூரமாக கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக கடலூர் மத்திய சிறையில் இன்று  சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தலைமையில்  துணை கண்காணிப்பாளர் மற்றும் 4 ஆய்வாளர்கள் 10 துணை ஆய்வாளர்கள் மற்றும் 158-க்கும் மேற்பட்ட போலீஸார் மோப்பநாயுடன் சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். காலை 6 மணி முதல் 8.30 வரை சிறையில் அங்குலம் அங்குலமாக  சோதனை மேற்கொண்டனர்.

பொதுவாக இதுபோல சோதனை காலங்களில் கைதிகள் தங்களிடம் இருக்கும் தடை செய்யப்பட்ட பொருள்களை 
தரையில் மணலில் புதைத்து விடுவார்கள். இதைக் கண்டறியவே மோப்பநாய் உதவியுடன் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது கஞ்சா, செல்போன்கள், சிம்கார்டுகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிறைக்கு வெளியே கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நிகழ்த்துவது சம்மந்தமாக முக்கிய குற்றவாளிகள் சதித்திட்டம் தீட்டிய தகவல் அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே கடலூர் மத்திய சிறைச்சாலையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் 
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.