வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (30/06/2018)

கடைசி தொடர்பு:18:20 (30/06/2018)

`இதுதான் ஒரே வழி!’ - சாதி ஒழிப்புகுறித்த கேள்விக்கு கமல் பதில்

'குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது சாதி, மதத்தைக் குறிப்பிட வேண்டாம்' என சாதி ஒழிப்பு குறித்த பெற்றோர்களின் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். 

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த பின், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலைகளைத் துரிதமாக மேற்கொண்டுவருகிறார் கமல்ஹாசன். அந்த வகையில் சமீபத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. தொடர்ந்து கட்சிப் பணிகளை கவனித்தது வருகிறார். கட்சிப் பணிகளை கவனித்து வரும் அதேவேளையில், சமூக வலைதளங்களிலும் கவனம்செலுத்தி வருகிறார். குறிப்பாக, ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். அதன்படி, நேற்றுமுன்தினம் மாலை,  ``ட்விட்டரில் நேரடியாக உங்களின் கேள்விகளுக்கு விடையளிக்க உள்ளேன். கேள்வி கேட்கிறவர்கள், #AskKamalhaasan என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களது கேள்வியைக்  கேட்கலாம்” என்று பதிவிட்டிருந்தார் . அப்படி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ``மருது சகோதரர்களுக்கு சுவர் போல எனக்கு ட்விட்டர்" எனத் தெரிவித்தார். 

இதற்கிடையே, இன்றும் கேள்விகளுக்குப் பதிலளித்துவருகிறார். அப்போது நான்ஸி என்ற பெண், ``அடுத்த தலைமுறையினருக்கு சாதியை எப்படி எடுத்துச் சொல்லப்போகிறீர்கள். பள்ளி, கல்லூரி அட்மிஷனில் சாதியைச் சேர்ப்பீர்களா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.  அதற்குப் பதிலளித்த கமல், ``எனது மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது சாதியைக் குறிப்பிட மறுத்துவிட்டேன். இதுதான் ஒரே வழி. இப்படித்தான் அடுத்த தலைமுறைக்கும் இதை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தனி  மனிதரும் இதைப் பின்பற்ற வேண்டும். கேரளாவில் இந்த முறையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படிச் செய்பவர்கள் கொண்டாடப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க