”சொத்துகளை முடக்குங்கள்!” கிரண்பேடியின் அடுத்த அஸ்திரம்

``அரசுக்கு வரி செலுத்தாதவர்களின் சொத்துகளை முடக்குங்கள்” என்று ஆளுநர் கிரண்பேடி வீசியிருக்கும் அஸ்திரம் அதிகார வர்க்கத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

”சொத்துகளை முடக்குங்கள்!” கிரண்பேடியின் அடுத்த அஸ்திரம்

``அரசுக்கு வரி செலுத்தாதவர்களின் சொத்துகளை முடக்குங்கள்” என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வீசியிருக்கும் அஸ்திரம் அதிகாரவர்க்கத்தை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

புதுச்சேரி அரசு வரலாறு காணாத நிதிச் சிக்கலில் தவித்துவருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி அரசின் மின்துறைக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தை வருடக்கணக்கில் செலுத்தாமல் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் உட்பட அரசியல் பின்னணி கொண்ட பலர் காலம் தாழ்த்திக்கொண்டிருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நீண்டகாலமாக மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பவர்கள் பெயரை நாளிதழ்களில் வெளியிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக உத்தரவிட்டிருந்தார்.

அதையடுத்து தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், தனி நபர்கள் என அனைத்துத் தரப்பினர்களும் தாங்கள் செலுத்த வேண்டிய பாக்கித் தொகையுடன் மின் துறையை நோக்கிப் படையெடுத்தனர். அதன் விளைவாக நான்கே நாள்களில் சுமார் 50 கோடி ரூபாய் பாக்கித் தொகை மின்துறைக்கு வசூலானது. கிரண்பேடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஆளுங்கட்சி தவிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகளும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன.

கிரண்பேடி

அதையடுத்து புதுச்சேரியில் பாக்கி வைக்கப்பட்டுள்ள மின் கட்டணம் மற்றும் வரிகளை வசூல் செய்வது தொடர்பாக  துறைச்செயலர்களுடனான கூட்டம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடந்தது. கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கிரண்பேடி வாட்ஸ் அப்பில் வெளியிட்டார்.

நீண்டகாலம் கட்டணம், வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தால் அவர்களின் சொத்துகளைச் சட்டபூர்வமாக அடையாளப்படுத்தப்படும். அவர்களுக்கு வழங்கப்பட்ட கால அளவுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் மின்னணு ஏலம் விடலாம். மேலும் சட்டபூர்வ ஒப்புதல் பெற்று அந்தச் சொத்துகளை அரசே ஏற்கும் நடவடிக்கையும் எடுக்கலாம். 

அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் வரிகளைச் செலுத்தாமல் அதிக அளவில் நிலுவையில் வைத்திருப்பவர்களின் சொத்துகளுக்கு முன்பாக அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். அதில் வரி, கட்டணம் செலுத்தாதவர் பெயரோடு, அந்தச் சொத்து ஏலத்துக்கு விடப்பட உள்ளது என்பதையும் அதில் தெரிவிக்க வேண்டும். அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்போரின் பெயருடன் அவரது புகைப்படத்தையும் இனி வெளியிட வேண்டும். 

நீதிமன்ற வழக்குகள் தொடர்பாகவும், எவ்வளவு வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் ஒவ்வொரு மாதமும் வணிகவரித் துறை ஆணையர், சட்டச் செயலரைச் சந்தித்து கேட்டறிய வேண்டும். 

அதேபோல நிலுவைத் தொகைக் கட்டணம் எவ்வளவு செலுத்தப்பட்டுள்ளது என்பதை நிதித்துறை செயலர் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக மாதாந்திரக் கூட்டம் ராஜ்நிவாஸில் நடக்கும். அதன்படி வரும் ஜூலை 26-ம் தேதி அந்தக் கூட்டம் நடக்கும் என்று பல்வேறு அதிரடியான முடிவுகள் வெளிவந்துள்ளன.

வெளிச்சந்தையில் 1,075 கோடி ரூபாயை புதுச்சேரி அரசு கடனாகப் பெற்றுள்ளது. அதில், 350 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் சரியான நேரத்தில் தாங்கள் செலுத்த வேண்டிய கட்டணம், வரிகளைச் செலுத்தினாலும்,  நிலுவைக் கட்டணங்கள் சரியான முறையில் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், வெளிச்சந்தையில் கடன் வாங்குவதைத் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வீசும் அடுத்தடுத்த அஸ்திரங்கள் அரசை ஏமாற்றுபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!