"கார்களுக்கும் பயிர்களுக்குமான போட்டி இது!" - 8 வழிச்சாலைகுறித்து அலசும் ஆவணப்படம்!

தமிழகம் சந்திக்கும் புது யுத்தம் இது. இந்த யுத்தத்தில், விவசாயமும் வேகமும் மோதிக்கொள்கின்றன. தொழில் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும் சண்டையிட்டுக்கொள்கின்றன. கார்களும் பயிர்களும் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் நிலைமை மாறிக்கொண்டேயிருந்தன. இன்னும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. பேட்டி எடுக்கும்போது, நிலத்தைக் கொடுக்க மாட்டோம் என்று பிடிவாதமாகக் கூறியவர்கள் பலரின் நிலங்களில் கல் நடப்பட்டது. மண்ணில் புரண்டு, அழுது, கதறிய அவர்களின் குரல்களில் மூன்று  தலைமுறையின் உழைப்பை ஒரேயடியாகப் பறிகொடுத்த கதறல் இருந்தது. சிலர் அழுகையை மீறி, அதிகாரத்தை எதிர்த்து தங்கள் நிலத்தைக் காத்து நிற்கின்றனர். பலரின் குரல்கள், அதிகாரத்தின் முன் அமிழ்ந்துவிட்டன. கண்ணீரோடு பேட்டிகொடுத்தவர்களின் பகுதிகளை நீக்கிவிட்டு, அவர்கள் காத்திரத்தோடு அழும் காட்சிகளைச் சேர்க்கவேண்டியிருந்தது. 

 

மலைகளை, காடுகளை, ஆர்ப்பரித்து ஓடும் நதிகளை, அதில் வாழும் ஜீவராசிகளை, யானைகளின் வலசைப் பாதைகளை, கிணறுகளை, குருவிகளை, முயல்களை, யானைகளைக் காக்கப் போராடும் செயற்பாட்டாளர்கள், பேட்டி எடுக்க வருகிறோம் என்று தகவல் தெரிவித்துவிட்டு, மறுநாள் காலை அங்கு சென்றடைந்தபோது... அதில் பலரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அரசின் அதிகாரத்திற்கு எதிரான கேள்விகளைக் கேட்கும் அவர்களின் குரல்கள் பெரும் பலம்கொண்டு அடக்கப்படுகின்றன. 

வளர்ச்சி... வளர்ச்சிதான் முக்கியம். நம் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல வேலை கிடைக்க, பணம் சம்பாதிக்க, சைக்கிளில் போகும் அவர்கள் கார்களில் பயணிக்க, குடிசைகளில் வாழும் அவர்கள் மாடி வீடுகளுக்கு மாற, "கன்னி","கோம்பை" என நாட்டு நாய்களை வளர்க்கும் அவர்கள் "ஜெர்மன் ஷெப்பர்டு", "சைபீரியன் ஹஸ்கி" போன்ற சீமை நாய்களை வளர்க்கும் நிலைக்கு மாற, 100 கி.மீ தூரத்தை வெறும் ஒரு மணி நேரத்தில் கடக்க, தொழிற்சாலைகள் பெருக, தொழில் வளர்ச்சி ஏற்பட... இன்னும், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அழுக்கு வேட்டியையும், மாட்டுவண்டியையும், குடிசைவீட்டையும் விவசாயிகள் கட்டிக்கொண்டு அழ வேண்டும்? அவர்களின் வாழ்நிலை மாற வேண்டாமா? அவர்கள் வாழும்சூழலில் புரட்சி ஏற்படக் கூடாதா?. இது அத்தனைக்குமான ஒரே தீர்வு, இந்த சர்வயோக நிவாரணி "8 வழிச்சாலை"யிடம் இருக்கிறது என்று ஓங்கி ஒலிக்கும் குரல்கள். 

இப்படியாகப் பல பார்வைகள்... பல குரல்கள்... பல கோரிக்கைகள்... பல கதறல்கள்... பல இழப்புகள்... பல சாதகங்கள்... பல பாதகங்கள். பல வளர்ச்சிகள்... பல அழிவுகள். இவை அத்தனையையும் ஒரு சேர இதில் ஆவணப்படுத்த முயன்றிருக்கிறோம். 

பார்க்கவும், பகிரவும் மறக்காதீர்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!