``மான் கறி கிலோ 500 ரூபாய்தான்!" - தேனியில் அதிகரிக்கும் வனவிலங்குகள் வேட்டை

தேனியில் அதிகரிக்கும் வனவிலங்குகள் வேட்டை! மான் கறி கிலோ 500 ரூபாய்

``மான் கறி கிலோ 500 ரூபாய்தான்!

தேனி, மலைகள் சூழ்ந்த மாவட்டம். திரும்பும் திசை எங்கும் உயர்ந்து நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு, மான் போன்ற விலங்குகள் மட்டுமல்லாமல் சிங்கவால்குரங்கு உட்பட அரிய பல விலங்குகளும் உள்ளன. சமீப காலமாக, தேனி மாவட்ட வனப்பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது. இது தொடர்பாகச் சிலர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

காட்டுமாடு கறிசமைக்க இருந்த இருவர் கைது :

கடந்த 26-ம் தேதி, மேகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட கோம்பைத்தொழு வனப்பகுதில், காட்டுமாடு வேட்டையாடப்பட்டிருப்பதாக வனத்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மலைப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக அமர்ந்திருந்த சிலரிடம் விசாரிக்க, வனத்துறையினர் அவர்களின் அருகில் சென்றபோது, அனைவரும் மலைப்பகுதிக்குள் ஓட்டம்பிடித்துள்ளனர். ஓடியவர்களில் இருவரை விரட்டிப் பிடித்த வனத்துறையினர், அவர்களிடம்  நடத்திய விசாரணையில், காட்டுமாடு வேட்டையாட வந்தவர்கள் எனத் தெரியவந்தது. வேட்டை நாய்கள்மூலம் காட்டுமாடு வேட்டை நடத்திவிட்டு, கறியைச் சமைக்கவிருந்தபோது பிடிபட்டுள்ளனர். காட்டுமாடு கறியை கோம்பைத் தொழுப் பகுதிகளில் விற்பனை செய்யவிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த வனத்துறையினர், தப்பி ஓடிய நால்வரை தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட வேட்டைக்காரர்கள்

மான் கறி கிலோ 500 ரூபாய்!

கடந்த 28-ம் தேதி, கூடலூர் வனசரகத்துக்கு உட்பட்ட கே.ஜி பட்டியில் மான்கறி விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய வனத்துறையினர், மூக்கன் – லோகமணி தம்பதிக்குச் சொந்தமான வீட்டில் மான் கறிக் குழம்பு வைத்திருப்பதைக் கண்டறிந்தனர். வனத்துறையினர் வருவதை அறிந்த இருவரும் தப்பி ஓடியதால், அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இருவரும் பிடிபடும்போதுதான் மான் கறி கொடுத்தது யார், எங்கே மான் வேட்டையாடப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என்கின்றனர் வனத்துறையினர். இந்நிலையில், ``மான் கறி எங்கள் பகுதியில் எளிதாகக் கிடைக்கும். போன் செய்தால், கறுப்பு கவரில் போட்டு வீட்டிற்கே கொண்டுவந்து கொடுப்பார்கள். கிலோ 500 ரூபாய்!’’ என்கின்றனர் அப்பகுதி மக்கள். இது ஒருபுறம் என்றால், இரண்டு நாள்களுக்கு முன்னர், கம்பம் வனப்பகுதிக்கு உட்பட்ட 18-ம் கால்வாய்க்கரை வனப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை ரோந்து சென்ற போலீஸார் பிடித்தனர். அவர், கருநாகமுத்தன்பட்டியைச் சேர்ந்த சோணை என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 3அடி நீளம் கொண்ட நாட்டுத்துப்பாக்கியைக் கைப்பற்றினர். வனவிலங்கு வேட்டைக்குச் செல்வதற்காக நின்றுகொண்டிருந்தாரா அல்லது வேட்டையாடிவிட்டு வரும் வழியில் போலீஸாரிடம் பிடிபட்டாரா என்ற கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது வனத்துறை.

நாடுத்துப்பாக்கி

வன விலங்கு வேட்டைக்கு என்னதான் தீர்வு?

வனங்களில் வேட்டைக்குச் செல்லும் நபர்கள், பெரும்பாலும் பொருளாதாரக் காரணங்களுக்காகவே காட்டுக்குள் செல்கிறார்கள். வறுமைதான் முக்கியக் காரணம். இவர்களை நல்வழிப்படுத்த, வனத்துறை இதுவரை பெரிய அளவில் எந்த முயற்சியும் செய்யவில்லை. வனக்குற்றவாளிகள் என முத்திரை குத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. மிகப்பெரிய பரப்பளவை சிலரே கவனித்துக்கொண்டு, ஆள்கள் பற்றாக்குறையால் தவிக்கும் வனத்துறை இதுபோன்ற வேட்டைக்காரர்களை நல்வழிப்படுத்தி வனத்துறைப் பணிக்குள் இணைத்து நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திக்கொடுத்தால், வனமும் காக்கப்படும், வனவிலங்குகளும் காப்பாற்றப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!