கழுத்து அறுக்கப்பட்ட ஐந்து மாதக் குழந்தை... நள்ளிரவில் அலறிய தாய்! | five month old baby neck was cut by Unidentified persons

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (30/06/2018)

கடைசி தொடர்பு:20:40 (30/06/2018)

கழுத்து அறுக்கப்பட்ட ஐந்து மாதக் குழந்தை... நள்ளிரவில் அலறிய தாய்!

திருவள்ளூர் அருகே ஐந்து மாதக் குழந்தை கழுத்து அறுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள அந்தக் குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை

திருவள்ளூரை அடுத்து பாண்டூர் கிராமம் சர்ச் தெருவில் வசித்து வரும் ராபின்-லிடியா தம்பதிக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். லிடியாவின் பக்கத்தில் குழந்தை குஷி படுத்துக்கொண்டிருந்தாள். விடியற்காலை 4.30 மணியளவில் லிடியா திடீரென விழித்துள்ளார். அப்போது, தன் பக்கத்தில் இருந்த குழந்தை குஷி காணாமல் போனது குறித்து அலறினார். அப்போது வீட்டில் இருந்த அனைவரும் குழந்தையைத் தேடினார்கள். வீட்டுக்குப் பக்கத்தில் குழந்தை குஷி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தாள்.

உடனடியாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் கழுத்தில் 13 தையல் போடப்பட்டது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின்  கழுத்தை அறுத்தது யார் என்பது குறித்து விசாரிக்க எஸ்.பி சிபிசக்கரவர்த்தி தனிப்படை அமைத்துள்ளார். இந்தத் தனிப்படையினர் குற்றவாளிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தையை நரபலி கொடுக்க யாராவது தூக்கிச்சென்றார்களா அல்லது முன்விரோதம் காரணமாகக் குழந்தையின் பெற்றோரை மிரட்ட இப்படிச் செய்தார்களா என்ற கோணத்தில் திருவள்ளூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அந்தக் கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.