நெல்லையில் புதுமைப்பித்தன் நினைவு தினம் அனுசரிப்பு: எழுத்தாளர்கள், கலை ஆர்வலர்கள் பங்கேற்பு!

சிறுகதை இலக்கியத்தின் தலைமகனாக வர்ணிக்கப்படும் புதுமைப்பித்தன் நினைவு தினம் நெல்லையில் அவர் வாழ்ந்த வண்ணார்பேட்டையில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர்கள் மற்று கலை இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். 

புதுமைப்பித்தன் நினைவு தினம்

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி என வர்ணிக்கப்படும் புதுமைப்பித்தன் 1906-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் நாள் கடலூர் மாவட்டம் திரிப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். அவரது இயற்பெயர் விருத்தாசலம். அவரின் தந்தை சொக்கலிங்கம் பிள்ளை. தாய் பர்வதத்தம்மாள் அவருக்கு எட்டு வயதாக இருக்கும்போதே காலமானார். தாயன்பு கிடைக்காமல் வளர்ந்த பையனுக்குத் தந்தை மறுமணம் செய்துகொண்டதால் சிற்றன்னையின் புறக்கணிப்புக்கு உள்ளாகும் நிலையை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் சிறுவயதிலேயே ஏற்பட்டது. 

தாசில்தாராக இருந்த அவரின் தந்தை சொக்கலிங்கம் பிள்ளை ஓய்வு பெற்றதும் நெல்லையில் வண்ணார்பேட்டையில் குடியேறினார். அதனால் பள்ளிக் கல்வியையும் கல்லூரிக் கல்வியையும் நெல்லையிலேயே கற்றார். அவருக்கு 1931-ம் ஆண்டு ஜூலையில் திருமணம் நடைபெற்றது. தன் வாழ்வியல் பிரச்னைகளுக்காகச் சென்னையில் குடியேறினார். இளம் வயதிலிருந்தே புனைவு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த அவர், ‘மணிக்கொடி’ இதழில் எழுதத் தொடங்கினார். அதில் வெளியான இவரது முதல் சிறுகதை ‘ஆத்தங்கரைப் பிள்ளையார்.’ 

மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி உள்ளிட்ட பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. ‘புதுமைப்பித்தனின் கதைகள்’ என்ற தொகுப்பு 1940-ல் வெளியானது. ‘கிராம ஊழியன்’, ‘சிவாஜி’ போன்ற சிற்றிதழ்களில் பணம் பெற்றுக்கொள்ளாமல் எழுதினார். ‘தினமணி’, ‘தினசரி’ பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவமும் அவருக்கு இருந்தது. 

புதுமைப்பித்தன் தனது எழுத்துப் பணியில் குறைவான் காலமே ஈடுபட்டபோதிலும் 100-க்கும் அதிகமான சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், நாடகங்கள் மற்றும் ஏராளமான மொழிபெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் என எழுதினார். மாக்சிம் கார்க்கி, எர்னஸ்ட் டோலர், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார். சிறந்த விமர்சகராகவும் இருந்தார். அவருடைய பல சிறுகதைகள் பிரெஞ்சு, ஆங்கிலம், ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

புதுமைப்பித்தன் 1948-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி மறைந்தார். தமிழ் சிறுகதை இலக்கியத்தின் பிதாமகனான புதுமைப்பித்தனின் நினைவு நாளான இன்று அவருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் வாழ்ந்த வண்ணார்ப்பேட்டை சாலைத்தெருவில் எழுத்தாளர் நாறும்பூநாதன் தலைமையில் கலை இலக்கிய அன்பர்கள் கூடி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பிரமநாயகம், கணபதி, சத்யநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!