வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (30/06/2018)

கடைசி தொடர்பு:23:30 (30/06/2018)

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் ஆய்வுப்பணி தொடக்கம்!

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில், தமிழக அரசு திருத்தியமைக்கப்பட்டு வெளியிட்ட அரசாணையின்படி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வுப் பணியைத் தொடங்கினர்.


மீனவர்

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 250 விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மற்ற மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளதுபோல, தங்களுக்கும் தங்கு கடல் மீன்பிடிக்க அனுமதி கேட்டு, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தனர். அதேபோல், முறையாகப் பதிவு செய்யப்படாத 160 விசைப் படகுகளைப் பதிவு செய்து தர வலியுறுத்தியும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். 1983-ம் ஆண்டு தமிழக மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, விசைப்படகின் நீளம் 60 அடியும் 140 குதிரை திறன் (ஹார்ஸ் பவர்) இன்ஜினும் உள்ள விசைப்படகுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, கடலுக்கு மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகின்றன. 

தூத்துக்குடி

பெரிய விசைப் படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தப் பிரச்சனை தொடர்பாக விசைப்படகு உரிமையாளர்கள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதில், மத்திய கடல் மீன்பிடி சட்டத்தின்படி, விசைப்படகுகளைப் பதிவு செய்யலாம் என மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதற்கு மீன்வளத்துறையினர், "அவ்வாறு விசைப்படகுகளைப் பதிவு செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை" என மறுத்து வந்தனர். இந்த நிலையில், திருத்தப்பட்ட அரசாணை ஒன்றை சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டது தமிழக அரசு. அதில், "விசைப்படகுகளின் நீளம் 24 மீட்டரும் இன்ஜின் பவர் 240 ஹார்ஸ் பவரும் இருக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விசைப்படகு உரிமையாளர்கள் பலர், தங்களின் படகுகளைப் பதிவு செய்ய மீன்வளத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுக்களின் அடிப்படையில் விசைப் படகுகளை ஆய்வு செய்து அறிக்கை தர, மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று மீன் பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். மீன் வளத்துறையின் ஐ.எப் தலைமையில், இரண்டு குழுக்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். இக்குழுக்கள் இரண்டு நாள்கள் இந்த ஆய்வில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், "அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட அரசாணையின் படி, 240 ஹார்ஸ்பவர் உடைய இன்ஜின்களை பொருத்துவதற்கு எங்களுக்கு கால அவகாசம் வேண்டும். எனவே, அதுவரையில் எங்களைக் கடலுக்குள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க