வெளியிடப்பட்ட நேரம்: 21:34 (30/06/2018)

கடைசி தொடர்பு:21:34 (30/06/2018)

`போக்குவரத்து ஊழியர்களின் ரூ.6.71 கோடியைத் தர தாமதிப்பதா?’ - உயர் நீதிமன்றம் கண்டனம்

பேருந்து

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களின் பணத்தை நிர்வாகச் செலவுகளுக்குப் பயன்படுத்தியது தொடர்பாகப் பேருந்து ஊழியர்களின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில், இன்னும் நிலுவையில் வைக்கப்பட்டிருக்கும் ஊழியர்களின் பணம் ரூ.6.71 கோடியை வரும் 6-ம் தேதிக்குள் வழங்கியாக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நிர்வாகச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுவந்த ஊழியர்களின் பணத்தை, ஓய்வுபெறும்போது வழங்கவில்லை எனப் பல ஆண்டுகளாகப் பிரச்னை இருந்துவருகிறது. இதையொட்டி கடந்த ஜனவரியில் பேருந்து ஊழியர்களின் தொடர் போராட்டமும் நடந்தது. நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில், கடந்த ஏப்ரல் 28-ம் தேதியன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், எட்டு போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குச் சேர வேண்டிய பணப்பயன் ரூ.59.37 கோடியை அவர்களின் நிர்வாகங்கள் தர வேண்டும் என உத்தரவிட்டது. நேற்றைய தேதியை அதற்குக் கெடுவாகவும் விதித்தது. 

நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் இதை விசாரித்தனர். அப்போது, போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், கோவை போக்குவரத்துக் கழகத்தைத் தவிர மற்ற ஏழு கழகங்களும் மொத்தம் ரூ.52.66 கோடியை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கிவிட்டதாகவும் கோவை கோட்டக் கழகத்துக்கு மட்டும்  இன்னும் 6.71 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகையை வரும் 9-ம் தேதிக்குள் வட்டியுடன் செலுத்துவதாகவும் கூறினார். 

பதில் வாதத்தில் ஊழியர்களின் வழக்கறிஞர்கள், “வட்டித் தொகையானது எப்படி கணக்கிடப்பட்டது எனும் விவரம் இல்லை. ஓய்வுபெற்ற நாளிலிருந்து பணப்பயன் நிலுவை உள்ளது. இந்நிலையில் கணக்கீடு விவரம் முழுமையாக இல்லை” என்று கூறினர். அரசுப் போக்குவரத்துக் கழக வழக்கறிஞரோ, வரும் 9-ம் தேதிவரை அவகாசம் வேண்டும் என்று கேட்டார். அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வரும் 6-ம் தேதிக்குள் கோவை கோட்ட முன்னாள் ஊழியர்களுக்கான பணம் முழுவதையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். அன்றைய தினத்தில் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தனர்.