எஃப்டிடிஹெச் தொழில்நுட்பம் வழியாக பிராட்பேண்டில் கால்பதிக்கும் ரிலையன்ஸ்!

ஜியோ தொலைதொடர்பு சேவையை வழங்கி வரும் ரிலையன்ஸ் நிறுவனம், அடுத்தகட்டமாக பிராட்பேண்டில் எஃப்டிடிஹெச் தொழில்நுட்பம் மூலம் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ்


ஒரு மாதத்திற்கு ஒரு ஜி.பி. டேட்டாதான் என்ற நிலைமையை மாற்றி ஒரு நாளைக்கு ஒரு ஜி.பி. டேட்டா என்ற புதிய அறிவிப்புடன் தொலைதொடர்பு சேவையில் களமிறங்கியது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க். இந்த அறிவிப்பை கண்டு மற்ற  நெட்வொர்க்குகள் திக்குமுக்காடிப்போயின. ஜியோவின் இந்த அறிவிப்பால் பல தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. இது மட்டுமின்றி, போன் கால்களும் இலவசம் என்ற ஜியோவின் அதிரடி அறிவிப்பால் பொதுமக்களின் கவனம் ஜியோவின் பக்கம் திரும்பியது. இதன்மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை குறைந்த நாட்களிலே ஈர்த்துக்கொண்டது ஜியோ.

ஜியோ

இப்படிப்பட்ட சூழலில் தற்போது பிராட்பேண்டிலும் கால்பதிக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி`ஃபைபர் டூ த ஹோம்’ (Fiber to the home) எஃப்டிடிஹெச் என்ற பெயரில் பிராட்பேண்ட் சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்க உள்ளது. ஜியோவில் பயன்படுத்திய அதே யுக்திகளை பிராட் பேண்டிலும் கையாளப்போகிறது ரிலையன்ஸ். அதாவது, ஜியோவைப்போலவே தொடக்கத்தில் இலவச டேட்டாக்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ். அது என்ன எப்டிடிஹெச் தொழில்நுட்பம்?

ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக ஃபைபர் கேபிள் மூலம் இணைதள சேவை அளிக்கும் திட்டத்தின் பெயர்தான் எஃப்டிடிஹெச். தற்போது காப்பர் கேபிள்கள் மூலமாக பிராட்பேண்ட் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், எப்டிடிஹெச்சில் ஃபைபர் கேபிள் பயன்படுத்தப்பட உள்ளது. ஃபைபர்நெட் நமக்கு புதிதல்ல என்றாலும், அதிலும் வீட்டிற்குள் கொடுக்கப்படும் இணைப்புகள் காப்பர் கேபிள்கள் கொண்டு மட்டுமே. இங்கே முழுக்க முழுக்க ஃபைபர் கேபிள் என்னும்போது இணையதளத்தின் வேகம், சாதாரண காப்பர் கேபிளை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும். இதனால் நாம் கணிணியில் தேடுதல், கேம்ஸ் விளையாடுதல், விடியோக்கள் டவுன்லோடு செய்தல் என அனைத்தும் அசத்தல் வேகத்தில் இருக்கும்.

இந்தத் தொழில்நுட்பத்தை இதற்கு முன்னால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சென்னை மற்றும் கொல்கத்தாவில் மட்டும் வழங்கி வருகிறது. ஆனால், ஜியோ நிறுவனம் பல்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் எஃப்டிடிஹெச் சேவையை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதனால் தற்போது பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வரும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படும் எனத் தெரிகிறது. இதன்மூலம் இந்தியா முழுவதும் பிராட்பேண்ட் சேவையை கைப்பற்றும் மிகப்பெரிய திட்டத்தில் இறங்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!