வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/07/2018)

கடைசி தொடர்பு:06:00 (01/07/2018)

ஒரு வருடத்துக்குப் பிறகு போலீஸ் பாதுகாப்போடு கதிராமங்கலம் வந்த அமைச்சர் துரைக்கண்ணு

ஒரு வருடத்துக்கும் மேலாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட யாரும் கதிராமங்கலத்துக்கு வந்து மக்களிடம் எதுவும் பேசவில்லை. இந்த நிலையில், கதிராமங்கலத்தில்  நடைபெற்ற  அரசு உயர்நிலைப் பள்ளி தொடக்க விழாவில் போலீஸ் பாதுகாப்போடு அமைச்சர் மற்றும் எம்.பி., கலந்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கதிராமங்கலம்

கதிராமங்கலம் மக்களின் கோரிக்கையை ஏற்று, அரசு தற்போது அங்கு அரசு உயர்நிலைப் பள்ளி துவக்கியுள்ளது. தற்போது, வாடகை கட்டடத்தில் நடைபெற்றுவரும் இந்த அரசுப் பள்ளிக்கு, விரைவில் சொந்தமாக புதிய கட்டடம் கட்டப்பட்டும். இந்த அரசுப் பள்ளியின் தொடக்க விழா இன்று கலெக்டர் அண்ணாத்துரை தலைமையில் நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைக்கண்ணு, எம்,பி.,பாரதி மோகன் எனப் பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய கலெக்டர் அண்ணாதுரை, `கதிராமங்கலம் மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு தற்போது உயர்நிலைப் பள்ளியை தொடங்கியுள்ளது. தற்போது வாடகைக் கட்டடத்தில் தொடங்கப்பட்டுள்ள பள்ளி, விரைவில் புதிய கட்டடத்துக்கு மாற்றப்படும். மக்களின் ஒத்துழைப்பு இருக்கும்பட்சத்தில், இங்கு கல்லூரிகூட கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்றார். 

மயிலாடுதுறை எம்.பி., பாரதிமோகன், `கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது, கடந்த 2000-ம் ஆண்டில்தான் அதற்கு அனுமதி அளித்தது அப்போதைய தி.மு.க அரசுதான். காங்கிரஸ் அமைச்சர் மணிசங்கர் அய்யர்தான் இங்கு ஓஎன்ஜிசியைக் கொண்டுவந்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ஓஎன்ஜிசி ஆய்வில் சீரமைப்புப் பணிகள்தான் நடந்தது. மீத்தேன் எடுக்கும் திட்டமோ, ஷேல் கேஸ் எடுக்கும் திட்டமோ கிடையாது. கதிராமங்கலம் மட்டுமல்ல தமிழகததில் எங்கும் இத்தகைய திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. சிலர் அவதூறாக பேசி மக்களை ஏமாற்றுகின்றனர். நாங்களும் விவசாயிகள்தான். விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பாதிப்பு என்றால், அதை  நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அரசும் அதற்குத் துணைபோகாது. கடந்த 2 ஆண்டுகளில் கதிராமங்கலத்தில் 457 பணிகள் அரசு மூலம் நடந்துள்ளன. ரூ. 45 லட்சத்தில் குடிநீர் வசதி, 27 லட்சத்தில் சாலைப் பணிகள், 6 லட்சத்தில் பேருந்து நிலையம் , பசுமை வீடுகள் எனப் பல வளர்ச்சிப் பணிகள் கதிராமங்கலத்தில் நடந்துள்ளன’ என்றார். 

வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, அரசு உயர்நிலைப் பள்ளியை திறந்துவைத்து,  பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அரசின் புத்தகப் பை, சீருடைமற்றும் புத்தகங்களை வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், `தமிழக அரசு  மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. கதிராமங்கலம் மக்களின் தேவை அறிந்து, தற்போது ரூ. 1 கோடி செலவில் புதிதாக அரசு உயர்நிலைப் பள்ளி தொடங்கப்படுகிறது. இன்னும் 15 நாளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கதிராமங்கலத்தில் தொடங்கப்படும். அனைத்துப் பகுதிகளுக்கும் தடையில்லாமல் குடிநீர் வசதி செய்து தரப்படுகிறது. சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன’ என்றார்.

இந்த நிலையில், கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என அப்பகுதி மக்கள்  40- வது நாளாக அய்யனார்கோயில் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி பிரச்னை தொடங்கிய நாள் முதல் இதுவரை ஆளுங்கட்சி தரப்பில் யாரும் அங்கு வந்து மக்களை சந்திக்கவும் இல்லை; உரிய விளக்கமும் அளிக்கவில்லை என்ற வருத்தம் பெரிய அளவில் ஊர் மக்களிடம் உள்ளது. 

இப்படிப்பட்ட சூழலில், நேற்று அமைச்சர் துரைக்கண்ணு,எம்.பி.,பாரதி மோகன் உள்ளிட்டவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு  கதிராமங்கலத்துக்கு வந்தனர். ஆளுங்கட்சியினர்  வந்ததால் போராட்டகாரர்களால் ஏதேனும் இடையூறு ஏற்படும் என்று கருதி கதிராமங்கலத்தில் நூற்றுகணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அ.தி.மு.க-வினர் வருகை, பெருமளவில் குவிக்கபட்ட போலீஸார் என மீண்டும் பரபரப்புடன் காணப்பட்டது கதிராமங்கலம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க