வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (01/07/2018)

கடைசி தொடர்பு:06:30 (01/07/2018)

"விரைவில் தென்மண்டலத்தில் களையெடுப்பு" ஆலாேசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு!

"நாளையோ அல்லது நாளை மறுநாளோ  தெற்கு மண்டலத்தில் களையெடுப்புகள் நடக்கும் " என்று தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின்  கரூரில் அதிரடியாகப்  பேசினார்.

 

ஸ்டாலின்


கரூரில் தி.மு.க மாணவரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .  இதில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,  "கடந்த பொது தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மட்டும் 15 முதல் 20 இடங்கள் நாம் வெற்றி பெற்றிருந்தால், தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்கும். ஆனால், அப்படி ஜெயிக்கவில்லை. அதற்குக்  காரணம் இங்குள்ள சில தி.மு.க புள்ளிகள் சரியாக செயல்படவில்லை. அதனால், கட்சியில் ஒரு சிலரை களையெடுக்கும் பணி அடிமட்ட தொண்டர்களின் எண்ணப்படி கொங்கு மண்டலத்தில் தொடங்கியிருக்கிறது.  நாளையோ அல்லது நாளை மறுநாளைக்குள்ளோ தெற்கு மண்டலத்தில் களையெடுப்புகள் நடக்கும்.

தமிழகத்தில் தினம் தினம் புதிய கட்சிகள் துவக்கப்படுகிறது. கட்சி தொடங்கும் முன்னரே தேர்தல் களம், பூத் ஏஜெண்ட் அறிவிப்புகள், தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம், என்ன கொள்கையென்றே தெரியாமல் நான்தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானது தொடர்பாக பிரதமர் மோடி ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்? 

38 பேரை வைத்து குமாரசாமி கர்நாடகத்தில் முதல்வராக முடிந்தது. நம்மிடம்   89 பேர் இருந்தும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.  ஒரு சிலர்   'கலைஞராயிருந்தால் நிலை இப்படி இருக்குமா?. ஸ்டாலின் மிக பொறுமை என்கின்றனர். பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழியை நினைவு கூறுங்கள். கலைஞர் என்றாவது ஆட்சியைக் கவிழ்த்தார் என்று எவரேனும் நிரூபித்தால், இந்த ஆட்சியை நாளையே நான் கவிழ்ப்பேன். கலைஞர் என்றும் ஜனநாயகத்தைக் காக்கப்படுவதையே விரும்புவார். தமிழக ஆளுநரின் ஆய்வால் தமிழகத்தில் மாநில சுயாட்சி பறிபோய்க்கொண்டிருக்கிறது. ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நானே கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன்" என்று பேசினார்.