சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்..! ஓய்வுபெற்ற நீதிபதி வேண்டுகோள்

சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவோம் எனதேர்தலில் எழுத்துப் பூர்வமாக வாக்குறுதிதரும் கட்சிகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கருங்குளத்தில் கிராம உதயம் சார்பில், 3000 மரக்கன்றுகள் வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சிறப்பாக தொண்டுகள் செய்த பெண்களுக்கு விருதுகள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,
"தமிழகத்திலேயே தென்மாவட்டப் பகுதிகளில்தான் அதிகமான பரப்பளவில் சீ்மைக் கருவேலம் எனப்படும் காட்டுக்கருவேல மரங்கள் பரவலாக வளர்ந்து காணப்படுகிறது. அவை முழுமையாக அகற்றப்பட வேண்டும். அதனை அகற்றிட அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவிய போது எரி பொருள் தேவை மற்றும் கரி மூட்ட பிழைப்புத் தொழில் ஆகியவற்றை பூர்த்தி செய்யும் நோக்கத்தில்தான், இந்த சீமைக் கருவேல விதையை வேலி போலவும், புறம்போக்கு நிலங்களிலும் விதைக்கப்பட்டது. ஆனால், இந்த விதை வறட்சியில் எரி பொருள் தேவை மற்றும் தொழில் வாழ்வாதாரத்தினை உடனடியாகத் தீர்க்க ஏற்றது. 

ஆனால், இதனைப் பரவலாகப் பரவ விட்டால் பிற்காலத்தில் ஆபத்துதான். வெட்ட வெட்ட தளிர்த்து நிற்கும் அசுர மரம் இது என காமராஜருக்கு தெரியுமோ தெரியாதோ என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால், வறட்சி நிலை, உடனடியாக சீராக வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த விதைகளை பரவலாக தூவ உத்தரவிட்டார் காமராஜர். ஆனால், இதன் வளர்ச்சித் தன்மை தெரிந்தால் பரவலாக விதைக்க உத்தரவிட்டு இருக்க மாட்டார்.  

தற்போது, இதனை முழுமையாக அகற்ற கிராம மக்கள் சுயமாகவே முன்வந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுக்கு ஒரு நிழல்தரும்  மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும். நகரத்தை விட, கிராமத்தில்தான் மரம் வளர்ப்பிற்குத் தடை ஏதும்  இருக்காது. ஒரு  குழந்தைப் போல நினைத்து ஆளுக்கு ஒரு நிழல் தரும்  மரக்கன்று வளர்க்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்திலேயே  ஸ்ரீவைகுண்டம் பகுதி, தாமிரபரணி தண்ணீர் செழிப்பு உள்ள பகுதி. தூர்வாருகிறோம் என்ற பெயரில்,  ஆற்று மணலை ஒப்பந்தக்காரர்கள், அளவே இல்லாமல் அள்ளி விற்பனை செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தப் பகுதி, முப்போகத்தில் நெல் விளைந்த பூமி. தற்போது தண்ணீர்ப் பாசனம் இல்லாமல் இரு போகமாகக் குறைந்து ஒரு போகமாக மாறி விட்டது. 

ஆற்று நீரைச் சேமிக்க வேண்டும். அதே போல, கிணற்று நீர், மழை நீர் மற்றும் நிலத்தடி நீரையும் சேமிக்க வேண்டும். இனி வரும் தேர்தல் நேரத்தில், சீமைக் கருவை மரங்களை முற்றிலுமாக அகற்றுவோம் என தேர்தலில் எழுத்துப்பூர்வமாகவாக்குறுதி தரும் கட்சிகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!