`கறுப்பு பணத்தை மீட்டெடுக்கும் நைஜீரியா அரசு...!' - 3 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க முடிவு

சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது நைஜீரியா அரசு. மீட்கப்படும் பணத்தை நாட்டில் வாழும் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்கத் திட்டமிட்டுள்ளார் அதிபர் முகமது புஹாரி.

கறுப்பு பணம்

நைஜீரியாவில் கடந்த 1993-1998-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் சானி அபாஷா. இவர் சர்வாதிகார ராணுவ ஆட்சியை நடத்திவந்தார். அவரது, ஆட்சியில் கோடிக்கணக்கான பணம் பதுக்கிவைக்கப்பட்டது. மேலும், சுவிட்சர்லாந்து வங்கிகளில் மில்லியன் டாலர் அளவில் பணம் டெபாஸிட் செய்யப்பட்டது. இதனிடையில், கடந்த 1998-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதியன்று மாரடைப்பால் அபாஷா உயிரிழந்தார். அதன்பிறகு, படிப்படியாக ராணுவ ஆட்சி குறைக்கப்பட்டது.

நைஜீரியாவில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட முகமது புஹாரி, பிரசாரத்தில் `முன்னாள் அதிபர் அபாஷா பதுக்கிய பணம் அனைத்தும் மீட்டெடுக்கப்படும்' என்ற வாக்குறுதியை முன்வைத்து, தேர்தலில் வெற்றி பெற்றார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் முகமது புஹாரி.

இதனால், சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டெடுத்து, நாட்டில் வாழும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்கத் திட்டமிட்டுள்ளார். சுவிஸ் வங்கிகளில் டெபாஸ்ட் செய்யப்பட்டுள்ள கறுப்பு பணத்தைத் திரும்ப பெறக் கடுமையான விதிமுறைகள் உள்ளன. அதனால், உலக வங்கியின் மேற்பார்வையில் பணப் பரிமாற்றம் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, சுவிஸ் வங்கிகள் திருப்பி கொடுக்கும் பணம் மூன்று லட்சம் குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!