காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது தி.மு.க 30 சதவிகிதம் கமிஷன் பெற்றதா? - முதல்வர் பழனிசாமி கேள்வி

கிருஷ்ணகிரியில் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே உள்ள 5 ஸ்டார் ஜமீல் சிட்டி மைதானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளையொட்டி 90 ஜோடிகளுக்குச் சீர்வரிசையுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருமணத்தை நடைத்தி வைத்தார். 

கிருஷ்ணகிரியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

திருமணத்தை முடித்து வைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ``பசுமை வழிச்சாலை குறித்து பல்வேறு விதமான வதந்திகளை எதிர்க்கட்சிகள் கிளப்பி வருகின்றன. குறிப்பாக தி.மு.க தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் பசுமை வழிச்சாலை குறித்து பேசும்போது எல்லாம் 30 சதவிகிதக் கமிஷனுக்காக பசுமை வழிச்சாலை போடுவதாக பேசி வருகின்றார். இந்தத் திட்டம் மத்திய அரசின் திட்டம். இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் மாநில அரசின் பங்கு என்பது நிலத்தைக் கையகப்படுத்தி அதற்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்குப் பெற்று தருவது மட்டுமே. இதுதான் மாநில அரசு செய்து வருகின்றது. இதில் எப்படி 30 சதவிகிதம் கமிஷன் பெற முடியும். அப்படி என்றால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க அங்கம் வகித்தபோது தரைவழி போக்குவரத்து அமைச்சராக டி.ஆர்.பாலுதானே இருந்தார். அப்போது இந்தியா முழுவதும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதே... அதில் தி.மு.க 30 சதவிகிதம் கமிஷன் பெற்றதா?.

நான்கு வழிச்சாலை அமைக்கும்போது 1 கோடியே 7 லட்சம் வாகனங்கள் இருந்தன. ஆனால் இன்று 2 கோடியே 57 லட்சம் வாகனங்களாக அதிகரித்துள்ளது. வரும் 2020-ம் ஆண்டில் 3 கோடியே 27 லட்சமாக வாகனங்களின் எண்ணிக்கை பெருகும். அதிகரிக்கும் வாகனங்கள் எந்தச் சாலையில் செல்லும். எனவேதான் தொலைநோக்கு திட்டத்தில் 8 வழி பசுமை வழிச்சாலை கொண்டுவரப்படுகிறது. இந்த 8 வழி பசுமை வழிச்சாலை அமைந்தால் தமிழகத்தில் கட்டமைப்பு வசதிகள் பெருகும். இதனால் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகாரிக்கும். நாட்டின் பொருளாதாரம் உயரும். இதில் தேவையில்லாமல் அரசியல் பேச வேண்டாம். எதிர்க்கட்சிகள் நினைப்பது நடக்காது. எங்களுக்குத் தொண்டர்களின் ஆதரவு உள்ளது’’ என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!