`கொள்ளை அடிப்பதில்தான் குறியாய் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!’ – ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொள்ளை அடிப்பதில் தான் குறியாய் இருக்கும் இந்த ஆட்சியை அகற்றவேண்டும்  என்கிறார்  தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின்.

ஸ்டாலின்

தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக  திருச்சி வந்துள்ளார். விமானம் மூலம் நேற்று காலை திருச்சி வந்த  மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி, கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து, கரூரில் நடந்த தி.மு.க மாநில, மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் தங்கை மகன் வாளாடி கார்த்திகேயன் – வந்தனா தம்பதியர்  திருமண விழாவில் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி சகிதமாக ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க முக்கிய நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ் இளங்கோவன் கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

ஸ்டாலின்

அதன்பின்னர் பேசிய ஸ்டாலின்,“வாழையடி வாழையாக எங்கள் குடும்பமும், அன்பில் குடும்பமும் நெருக்கமாக இருந்து வருகிறது. இன்னும் இருக்கும். கருணாநிதி ஆணையை உடனடியாக செயல்படுத்துவதில் முதன்மையாக இருந்தவர் அன்பில் தர்மலிங்கம். எந்த லட்சியத்திற்க்காக அன்பிலார் கருணாநிதிக்கு துணை நின்றாரோ அவர்களுடைய லட்சியத்தை நிறைவேற்ற நாம் உறுதியேற்க வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு என்று வரும் என்பதை விட இந்த அ.தி.மு.க ஆட்சி என்று விலகும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இரண்டு ஆட்சி நடைபெறுகிறது. எடப்பாடி தலைமையில் ஒரு ஆட்சியும், மத்திய அரசின் ஆணைக்கேற்ப செயல்படும் ஆளுநர் தலைமையில் ஒரு ஆட்சியும் நடந்து வருகிறது. இவ்விரு ஆட்சிகளும் மாநில உரிமைகளை பறித்து வருகிறது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அனைத்து கட்சிகளையும் அழைத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த மாட்டோம் என முடிவு செய்துள்ளார்.ஆனால், அதை பற்றி எனக்கு கவலை இல்லை என தமிழக முதல்வர் கூறியுள்ளார். இவர்கள் கவலையெல்லாம் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே. தமிழக முதல்வர் நீட், விவசாயிகள், காவிரி, எட்டு வழி சாலை, தூத்துக்குடி உள்ளிட்ட பிரச்னைகளில் எதை பற்றியும் கவலைபடவில்லை, தன் ஆட்சியை காப்பாற்றி கோடி கோடியாய் கொள்ளை அடிப்பதில்தான் கவலை கொண்டுள்ளார். ஆகவே, இந்த ஆட்சியை அகற்ற இந்த விழாவில் நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்” என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!