35 ஆண்டுகளுக்குப் பின்னர் ராமநாதபுரம் தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவியில் புதிய மாற்றம்!

35 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தின் கீழ் இருந்து வந்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயலாளர் பதவி தற்போது மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் தி.மு.க-வினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க புதிய செயலாளர் முத்துராமலிங்கம்

ராமநாதபுரம் தொகுதி எம்.பி-யாக இருந்து வந்த எம்.எஸ்.கே.சத்தியேந்திரனின் மறைவுக்கு பின் சுப.தங்கவேலன் தி.மு.க-வின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியின் மூலம் அன்று முதல் இன்று வரை சுப.தங்கவேலன் கட்சியை வளர்க்க பாடு பட்டாரோ இல்லையோ, தனது எதிரிகளை மட்டும் வளரவிடாமல் பார்த்துக் கொண்டார். கட்சியிலும், அமைச்சராகப் பதவி வகித்த காலங்களிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தங்கவேலன் மீது எழுந்தது. குறிப்பாக மாவட்டத்தில் அண்ணா அறிவாலயம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலத்தினை விற்பனை செய்தது. தனக்கு போட்டியாக யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் தொகுதியினை தொடர்ச்சியாக கூட்டணி கட்சிக்காரர்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்தது. மாவட்டத்தில் கட்சியை வளர்க்காமல் அ.தி.மு.க-வினருடன் ரகசிய உடன்பாடு வைத்து கொண்டு செயல்பட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகள் கட்சிக்காரர்களால் சுமத்தப்பட்டது.

ஆனாலும் ஏதாவது ஒரு வகையில் தி.மு.க தலைமையினை சரிகட்டி மீண்டும் மீண்டும் மாவட்ட செயலாளர் பதவியினை தக்க வைத்துக் கொண்டார் தங்கவேலன். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் தி.மு.க ஒரு தொகுதியை கூட பிடிக்கவில்லை. இதனால் தங்கவேலனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி இவரது மகன் சுப.த.சம்பத் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னரும் கட்சியில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. மீண்டும் தங்கவேலனே மாவட்ட செயலாளர் ஆனார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் தங்கவேலனின் மற்றொரு மகனான சுப.த.திவாகரன் மாவட்ட செயலாளராக ஆக்கப்பட்டார்.

அந்த தேர்தலில் திருவாடானை தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். தேர்தலின்போது கட்சித் தலைமை கொடுத்த நிதியினை முழுமையாக செலவு செய்யாததால் வெளியூரில் இருந்து வந்த நடிகர் கருணாஸிடம் தோல்வி அடைந்தார் திவாகரன். இதன் பின்னரும் கட்சியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல், தனது தந்தை தங்கவேலனைப் போலவே தனக்கு ஆதரவானவர்களை மட்டுமே வைத்து கொண்டு கட்சியினை நடத்தி வந்தார். இதனால் மாவட்டத்தில் தி.மு.க இருக்கிறதா என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்ததுடன் கட்சியிலும் மந்த நிலையை உருவாக்கியது.

சமீபத்தில் நடத்தப்பட்ட நேர்காணலின் போது தங்கவேலன் மற்றும் அவரது மகனும் மாவட்ட செயலாளருமான திவாகரன் மீது மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து கட்சியின் நிர்வாகிகள் ஸ்டாலின் முன் எடுத்து வைத்தனர். இதன் விளைவாகவே தற்போது மாவட்ட செயலாளர்  பதவி திவாகரனிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. கமுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கம், முதுகுளத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராகவும் இருந்து மறைந்த காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமியின் மகன் ஆவார். காதர்பாட்சா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார். அப்போது ஸ்டாலினே நேரில் வந்து காதர்பாட்சா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் அவரது மகன் முத்துராமலிங்கம் கமுதி வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளராக ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார். தற்போது அவரே மாவட்டச் செயலாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். 35 ஆண்டுகளுக்கு பின் தங்கவேலன் குடும்பத்தை சேராத ஒருவர் தி.மு.க-வின் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

                                                      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!