அன்புமணியைத் தொடர்ந்து சேலம் மக்களைச் சந்திக்கும் ஜி.கே.வாசன்!

சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பா.ம.க இளைஞரணித் தலைவர்  அன்புமணியைத் தொடந்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனும் விவசாயிகளை நேரில் சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன்

திருச்சியில் இன்று பத்திரிகையாளர்களை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்தார். அப்போது பேசிய ஜி.கே.வாசன், “கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த விவசாயி தமிழரசன் தற்கொலை மிகவும் வேதனையான செய்தி. மத்திய அரசு தனியார் நிறுவனங்கள் மூலம் கடனை வசூல் செய்ய அழுத்தம் தந்த காரணத்தால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. கடனை வசூலிக்க “கோடக் மகிந்திரா நிறுவனம்” அழுத்தம் கொடுத்துள்ளது.  த.மா.க விவசாயப் பிரிவு சார்பில் கோடக் மகிந்திரா தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டால், அந்த வங்கியைத் தடை செய்யக் கோருவோம்.2018-19 ல் விவசாயப் பராமரிப்புக்காக 322 கோடி  ரூபாய் மதிப்பிலான  குடிமராமத்து பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. மராமத்து பணிகள் சரியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். 

கர்நாடகாவைப் பொறுத்த வரை காவிரி ஆணையத்தை முடக்கும் நோக்கோடு செயல்படுகிறது. இது வேதனைக்குரியது. “ஸ்கீம்” என்றால் என்ன என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நாளைய தினம் காவிரி மேலாண்மை  ஆணைய கூட்டம் முறையாக நடக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை ஆணையம்  பின்பற்ற வேண்டும்.

திருச்சி காந்தி மார்க்கெட், மணிகண்டம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்த வியாபாரம் மட்டும் அங்கே இருக்கும் என சொல்லிவிட்டு தற்போது சில்லறை வியாபாரத்தையும் அங்கே மாற்றுகிற முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இது வாழ்வாதார பிரச்னை. மறுபரிசீலனை உடனடி தீர்வு தேவை. வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்லும் சாலை சீரமைக்கப் பட வேண்டும். திருச்சி காவிரியில் மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும். உய்யக் கொண்டான் ஆறுகள் சீரமைக்கப்பட வேண்டும். திருச்சி கரூர் சாலை விபத்துகளைக் குறைக்க சாலையை அகலப்படுத்த வேண்டும்’’ என்றார்.  

மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் முதன் முறையாகத் திருநங்கை ஒருவர் பார் கவுன்சிலில் பதிந்து வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், ``மானிய விலை கேஸ் சிலிண்டர் உயர்ந்திருக்கிறது. அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் மத்திய அரசு பாதகத்தை ஏற்படுத்துகிறது. ஜி.எஸ்.டி அமலுக்கு வந்து ஒரு வருடம் ஆன பின்பும் நம்பிக்கை ஏற்படவில்லை. அதனால் பாதகம் தான் அதிகம். பல துறைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் சுமூகத் தீர்வை எட்ட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பது ஏமாற்றம். மக்கள் எண்ணங்களையும், கஷ்டங்களையும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை. தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான அரசுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள். சேலம் எட்டு வழிச் சாலைக்கு ஏன் தமிழக அரசு இவ்வளவு அவசரம் என்ற கேள்விக்கு பதில் இல்லை. இந்தத் திட்டங்களை யாரும் கோரிக்கையாக வைக்கவில்லை. பல மக்கள் நலத் திட்டங்கள் கோரிக்கை வைத்தும் தீர்வு காணப்படாதபோது ஏன் இதற்கு மட்டும் அவசரம்?’’ என்றார். அதேபோல், தமிழக அரசு நீட் , குடிநீர், சாலை இணைப்புகளில் கவனம் செலுத்தலாம் என்றும், எட்டுவழிச் சாலை திட்டத்தைக் கட்டாயப்படுத்துவது தவறான போக்கு எனத் தெரிவித்த அவர், ஜூலை  8 ஆம் தேதி சேலம் சென்று மக்களிடம் பேச இருப்பதாகக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!