வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (01/07/2018)

கடைசி தொடர்பு:05:42 (03/07/2018)

தினமும் 100 பேருக்கு உணவு... 13 வருடங்களாக அன்னமிடும் 'திருச்சி பாரதி'!

தினமும் 100 பேருக்கு உணவு... 13 வருடங்களாக அன்னமிடும் 'திருச்சி பாரதி'!

திருச்சி பீமநகரை சேர்ந்த ஒருவர் தினமும் ஆதரவற்ற நூறு பேருக்கு இலவசமாக சாப்பாடு போடுகிறார் என்று கேள்விப்பட்டோம். அவரைக் காண்பதற்காக பீமநகரில் இறங்கி விசாரித்தபோதே அவரைப்பற்றிக் கூறி வீட்டுக்கான வழியைக் காட்டினார் ஒரு மளிகைக்கடைக்காரர்.

அந்த வீட்டிற்கு நாம்  சரியாக ஒரு மணிக்கு சென்றோம். வெளியே கும்பல் கும்பலாக முதியவர்கள், பார்வையற்றவர்கள், கூலித்தொழிலாளர்கள் எனப் பல மனிதர்கள் அமர்ந்திருக்கின்றனர். ஒரு மனிதர் மொபட்டில் வருகிறார். வந்து இறங்கி அங்கே உட்கார்ந்திருந்த மக்களை அழைக்க, உடனே அந்த மக்களில் ஒரு பகுதியினர் அந்த அறைக்குள் சென்று அமர்கின்றனர். கண் தெரியாத மக்களை அவரே அழைத்துச் சென்று உட்கார வைக்கிறார்.

நாம் அவரிடம் சென்று பேசியபோது.. "என் பேரு பாரதி. ஒரு மணியில் இருந்து மூன்று மணி வரைக்கும் மக்களுக்கு நானே சாப்பாடு பரிமாறணும். மூணு மணிக்கு மேல் வர்றீங்களா..? பேசலாம்" என்றார். நாங்கள் அதுவரை காத்திருப்பதாகக் கூறினோம். உடனே, அவர் ”நீங்களே பரிமாறுங்கள்” என்றார். அங்கிருந்த அத்தனை பேருக்கும் நாமே பரிமாறிவிட்டு வெளியே வந்தபோது ஒரு பாட்டி அங்கு அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுகொடுத்தோம்.

"என் பேரு ஈஸ்வரி. நான் முறுக்கு வியாபாரி. என் புருஷன் இருந்தவரைக்கும் என்னை கண்ணுல வச்சு பாத்துக்கிட்டாரு.. எனக்கு ரெண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்காங்க.. அவரு போனதுக்கப்புறம் ஒரு மவன் குடிச்சு குடிச்சு சொத்தையெல்லாம் அழிச்சு, முப்பது வயசுல செத்தும் போயிட்டான். இன்னொரு மவன் ஏர்போர்ட்டுகிட்ட இருக்கான்.. பிராந்தி கடையில வேலை பார்த்துக்கிட்டு இருந்தான். முன்ன ஒரு சமயம் வேலையெல்லாம் போனப்போ, என் மகனுக்கும் வேலை போயிடுச்சு. அவன் வேலையில்லாம ரொம்ப கஷ்டப்பட்டான். அவனுக்கு பாரமா இருக்க விரும்பலை. மகளோட வீட்டுலயும் இருந்து பார்த்தேன். எதுவும் ஒத்து வரலை. யாருமே கண்டுக்கல. சரியான நேரத்துக்கு சாப்பாடும் கிடைக்கல. 

திருச்சி

அப்போதான் இங்கே சாப்பிட வர்றவங்க என்னையும் கூட்டிட்டு வந்தாங்க. இந்த தம்பிக்கிட்ட, "முதியோர் இல்லத்துல போய் சேர்த்துவுடுப்பா. யாரு கண்ணுலேயும் தென்படாம இந்தக் கிழவி எங்கேயோ இருந்துக்குறேன்"னு சொன்னேன். ஆனா அவரு இங்கேயே சாப்பிடச் சொல்லிட்டாரு. இதில்லாம மாசம் ஆயிரம் ரூபாய் பணம் தராரு." என்று வாஞ்சையுடன் கூறினார். 

உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கிட்டா பாட்டி என்றதற்கு, "அதெல்லாம் வேணாம்யா.. என் மவன் பார்த்தா வருத்தப்படுவான்" என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.
   
இந்த மூதாட்டி அங்கே வரும் நூற்றுக்கணக்கான மக்களில் ஒருவர். இன்னும் அவர் போன்ற நிறைய மனிதர்களைச் சந்தித்து அவர்களின் கதையை கேட்டோம். மணி மூன்று நெருங்கியதும் நம்மிடம் வந்த பாரதி, பேச ஆரம்பித்தார்... 

திருச்சி உணவு

"எனக்கு சிறுவயதில் இருந்தே ஆதரவற்ற மக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. படித்து முடித்தவுடன் வீடு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்தேன். அந்த சமயத்தில் என் அப்பாவும் அம்மாவும் இறந்துவிட்டனர். நிறைய பிள்ளைகள் இருந்தும், ஆதரவில்லாமல் பலர் சாலைகளில் சுற்றித்திரிந்தது எனக்குள் மிகப்பெரிய உறுத்தலை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் நான் சந்திக்கும் சில மனிதர்களுக்கு உணவுகள் வாங்கித் தந்தேன். பின்பு, ஓரளவுக்கு இதையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2004ல் இருந்து முழுநேரமும் ஆதரவற்ற முதியோருக்கு உணவு தர ஆரம்பித்தேன். 

பாரதிஎனக்கு இது சொந்த வீடுதான். என்னுடைய இந்த முயற்சியே போதுமான மனநிறைவை தருவதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும், எனக்கு மனைவி, குழந்தைகள் என இருந்தால் இவர்களை கவனிப்பது கஷ்டமாகிவிடும். எனவே, அதை நான் தவிர்த்து விட்டேன். என் வீட்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் இரண்டு அறைகளை உணவு கொடுப்பதற்காகவே ஒதுக்கி விட்டேன். தற்போது, ஒரு அறையில் சமையல். இன்னொரு அறையில் சாப்பாடு. நான் 2004ல் இதைச் செய்ய ஆரம்பித்ததில் இருந்து புஷ்பவள்ளி அம்மாதான் சமைக்கிறார். தினமும் நூறு பேருக்கு மேல் சாப்பிடுகின்றனர். மதியம் மூன்று மணிக்கு உணவு தீர்ந்துவிடும். அதன் பிறகு யாராவது வந்தால்கூட உடனே அடுப்பை பற்றவைத்துவிட சொல்லி விட்டேன். இங்கே வரும் அனைத்து மனிதர்களையும் என் பெற்றோர்களாகவே கருதுகிறேன். பதிமூன்று வருடங்களாக தொடர்ந்து அவர்களுக்கு என்னால் முடிந்த கடமையைச் செய்து வருகிறேன். இனியும் செய்வேன் " என்றார்.  மதியம் 12 மணி முதலே பாரதியின் வீட்டுத் திண்ணையிலும் வீட்டிற்கு எதிரிலும் முதியவர்கள் வந்து அமர தொடங்குகின்றனர். சமையல் பணி முடிந்தவுடன் சரியாக மதியம் ஒரு மணிக்கு சாப்பிட அழைக்கிறார் பாரதி. பதினைந்து பேர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிடக்கூடிய சிறிய அறை என்பதால், மற்றவர்கள் காத்திருக்கின்றனர்.

வாழை இலை போட்டு இனிப்புடன் உயர்ரக அரிசி சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், வடை என தினமும் விருந்து போல சாப்பாடு தருகிறார். இது மட்டுமல்லாமல் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களின்போது சாப்பிட வரும் முதியோர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புடன் உணவு வழங்குகிறார். இவரது சேவையை பார்த்து பாராட்டுவதோடு, பலரும் உதவி செய்கின்றனர். சில மனிதர்கள் தங்களது பிறந்தநாள் அன்று இங்கு வந்து இந்த மனிதர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். 

"தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று சொன்ன மகாகவி பாரதியின் சொல்லைத் தவறாமல் பின்பற்றி தன்னால் இயன்றவரை உதவி புரிகிறார் இந்த பாரதி. 


டிரெண்டிங் @ விகடன்