வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (01/07/2018)

கடைசி தொடர்பு:23:09 (01/07/2018)

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவிக் கரம் நீட்டிய அமெரிக்கவாழ் தமிழர்கள் அமைப்பு!

வறட்சியால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் கறவை மாடுகளை வழங்கியுள்ளனர். 

கறவைமாடு

2016 ஆம் ஆண்டு வறட்சியால்  பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள  உம்பளச்சேரி கால்நடை பண்ணையில் நடைபெற்றது. `சேவ் ஃபார்மர்ஸ்' என்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலைய நிறுவனர் கார்த்திகேய சேனாதிபதி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தொண்டு நிறுவன இயக்குனர் ஜீவானந்தம் உம்பளச்சேரி பாரம்பரிய கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2016 ஆம் ஆண்டு வறட்சி காரணமாக சம்பா சாகுபடி விவசாயம் பாதித்து தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணமடைந்த விவசாயிகளில் 23 பேரின்  குடும்பத்துக்கு உம்பளச்சேரி கறவைமாடுகள் வழங்கப்பட்டன. இதே அமைப்பு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2016ம் ஆண்டே உடனடி நிவாரணமாகத் தானியங்களை வழங்கியது. அதைத் தொடர்ந்து இயற்கை விவசாயப் பயிற்சியையும் குடும்பத்தினருக்கு அளித்தனர். அதேபோல், அவர்களது குடும்பத்தில் உள்ள கல்வி பயிலும் குழந்தைகளுக்குக் கல்வி கட்டணம் போன்ற உதவிகளை செய்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று வறட்சியால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கங்களுக்கு உம்பளச்சேரி கறவை மாடுகளை வழங்கியுள்ளனர்.