வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (01/07/2018)

கடைசி தொடர்பு:21:30 (01/07/2018)

சண்டையில் காயமடைந்த மக்களின் உயிரைக் காப்பற்றிய காஷ்மீர் மருத்துவர் - மகனை இழந்த சோகம்!

காஷ்மீர் சண்டையில் பலரது உயிரைக் காப்பாற்றிய மருத்துவரின் மகன், அதே சண்டையில் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. 

சண்டை

கோப்புப்படம்

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா  பகுதியில் உள்ள தாமுனா கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். முதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின் போது 2 பேர் தப்பிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தின் போது அப்பகுதியில் சிலர் பாதுகாப்புப் படையினரை நோக்கிக் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் மட்டுமல்லாது பொதுமக்களும் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்களுக்கு புல்வாமா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த அப்துல்கனி கான் என்ற மருத்துவரின் 16 வயது மகன் ஃபைசன் அகமது கான், தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்த பின்னர் வீடு திரும்பிய மருத்துவர் அப்துல்கனியை, உடனடியாக மருத்துவமனைக்குத் திரும்பச் சொல்லி அழைப்பு வந்திருக்கிறது. அழைப்பை அடுத்து மருத்துவமனைக்கு விரைந்த அவரிடம், மகன் உயிரிழந்த தகவலை உடன் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் அப்துல்கனி கான், மகனின் உடலைப் பார்த்துக் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது என அந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜ்புரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஃபைசல் முதலில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

அங்கு முதலுதவி செய்யப்பட்ட பின்னர், புல்வாமா மாவட்ட மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால், அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் ஃபைசல் உயிரிழந்திருக்கிறார். தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பலரைக் காப்பாற்றிய மருத்துவர் அப்துல்கனி, தனது மகனைப் பறிகொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனது சிறுவயதின் பெரும்பான்மையான காலத்தை புல்வாமா மருத்துவமனையிலேயே கழித்த ஃபைசல், இதே மருத்துவமனையில்தான் பிறந்திருக்கிறார். தற்போது, அவர் அந்த மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். உயிரிழந்த ஃபைசலின் உடலுக்கு, பாம்போர் பகுதியில் உள்ள அவரது சொந்த ஊரான லதூ கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றது.