"நான் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவளிக்கவில்லை" - ஜக்கி வாசுதேவ் விளக்கம்!

"நான் ஸ்டெர்லைட் ஆலைக்கோ, வேறு தொழிற்சாலைக்கோ ஆதரவளிக்கவில்லை" என ஜக்கி வாசுதேவ் விளக்கமளித்துள்ளார்.

ஜக்கி வாசுதேவ்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக, பாபா ராம்தேவ் மற்றும் ஈஷா யோக மையத்தின் ஜக்கி வாசுதேவ் ஆகியோர் கூறிய கருத்துகள் விமர்சனதுக்குள்ளானது. இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், ஈஷா யோக மையம் தங்களது மகள்களை மூலைச் சலவை செய்து, சட்ட விரோதமாக சிறை வைதுள்ளதாக குற்றம்சாட்டும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் காமராஜ், இது தொடர்பாக, 'ஒரு உயிரின் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா?' என்று ஜக்கி வாசுதேவுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக, நமது இணையதளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஜக்கி வாசுதேவ் கூறியிருந்த கருத்து மற்றும் காமராஜ் எழுப்பியிருந்த கேள்விகள் தொடர்பாக ஈஷா யோக மையம் தரப்பில் விளக்கம் கேட்டிருந்தோம். 

இதையடுத்து, ஈஷா யோக மையம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், "தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஆழ்ந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. நம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், இனி ஒரு சம்பவம் இவ்வாறு நிகழக்கூடாது. நான் ஸ்டெர்லைட் ஆலைக்கோ, வேறு தொழிற்சாலைக்கோ, அரசியல் கட்சிக்கோ ஆதரவளிக்கவில்லை. சுற்றுச்சூழல் அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை.

பொது உடைமைகளை எரிப்பதோ, தொழிற்சாலைகளை அடைப்பதோ தேசத்திற்கு நன்மை பயக்காது. இதை அரசியலாக்காதீர்கள், நாம் உயிர்களை இழந்துள்ளோம். இத்தகைய சம்பவங்கள் இனி நிகழாதிருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இந்தியா ஒரு வளரும் நாடு. எனவே, நமக்கு தொழிற்சாலை அவசியம், தொழிற்சாலைகளை இல்லாவிட்டால் மக்களுக்கு வேலை வாய்ப்பு இருக்காது. பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும். தேசநலனும், மக்களின் நல்வாழ்வும்தான் எனது முதன்மை நோக்கங்கள் என்றுதான்  சத்குரு கூறியிருந்தார்.

மேலும், காமராஜின்  2 மகள்களும் தங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் ஈஷாவில் சுதந்திரமாகவும், நலமாகவும் இருக்கின்றனர். இது தொடர்பாக நீதிமன்றமும் தெளிவாக தீர்ப்பளித்து இருக்கிறது.  ஈஷாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் காமராஜ் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்" என்று கூறியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!