'அதிகாரிகளை சேலை கட்டச் சொன்ன விவகாரம்' - மன்னிப்பு கேட்டார் கலெக்டர்...! | 'The collector apologized For who told the officers to wear sari'...

வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (02/07/2018)

கடைசி தொடர்பு:02:30 (02/07/2018)

'அதிகாரிகளை சேலை கட்டச் சொன்ன விவகாரம்' - மன்னிப்பு கேட்டார் கலெக்டர்...!

கலெக்டர்

கடந்த ஜூன் 29-ம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் போது பேசிய விவசாய சங்கப் பிரதிநிதி ஒருவர், ‘மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், பவானி தாலுகாவில் உள்ள வைரமங்கலம் கிளை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்பட்டு வருகின்றனர்’ என வருத்தப்பட்டார்.

இதனைக்கேட்டு டென்ஷனான கலெக்டர் பிரபாகர், ‘2 வருஷத்துக்கு மேல ஆகியும் ஒரு சர்வே செஞ்சு ஆக்கிரமிப்பை அகற்ற முடியலைன்னா என்ன வேலை பாக்குறீங்க. அடுத்தமுறை இந்தப் பிரச்னையை சரி செய்யலைன்னா மீட்டிங்குக்கு சேலை கட்டிட்டு வாங்க’ என அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கக் கூட்டம் நடந்த அரங்கமே கப்சிப் என்றானது. ‘பொது சபையில் அரசு அதிகாரிகளைப் பார்த்து நீங்க சேலை கட்டிட்டு வாங்கன்னு எப்படி கலெக்டர் சொல்லலாம். 

இதே பெண் அதிகாரி ஒருவர் வேலையை சரியாகச் செய்யவில்லை என்றால், அவரை ஆண்களைப் போல பேன்ட், சர்ட் போட்டு வரச் சொல்லுவாரா!... இது பெண்களை கொச்சைப்படுத்தும் செயல். ஒரு ஆணாதிக்க மனோபாவத்தோடு கலெக்டர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது’ என கலெக்டரின் பேச்சு பெரிய சர்ச்சையையும், விமர்சனங்களையும் கிளப்பியது. இந்தச் சேலை விவகாரம் வைரலாக, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் வரவழைத்து கலெக்டர் பிராபகர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரம் குறித்து விளக்கம் ஒன்றையும் கலெக்டர் கொடுத்திருக்கிறார். அதில்,   ``ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடந்த 29.06.2018 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகளின் குறையை தீர்த்து வைக்க அரசு அதிகாரிகள் மிகுந்த காலதாமதம் ஏற்படுத்துவதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார். அதிகாரிகள் தங்களது பணிகளை விரைந்து செயல்படவும், அடுத்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக விவசாயிகளின் குறைகளை முடித்துத் தரவேண்டும் எனவும் அறிவுரை வழங்கிய நேரத்தில் தவறுதலாக, அதிகாரிகள் வேலை செய்யாவிடில், நாம் அனைவரும் புடவை கட்டி வரவேண்டும் எனப் பேசியது எந்தவிதமான உள்நோக்கமின்றி விவசாயிகளின் குறையை அதிகாரிகள் சரியாக தீர்க்காமல் உள்ளார்களே, என்ற ஆதங்கத்தில் தவறுதலாக கூறப்பட்டது. இச்செயலுக்காகச் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நேரடியாக வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற செயல்கள் வரும் காலங்களில் நிகழாமல் தவிர்க்கப்படும். மேலும், இச்செயலினால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் அவர்களுக்குத் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


[X] Close

[X] Close