`சேலம் பசுமை வழிச் சாலை தேவையில்லாதது' - ஜவாஹிருல்லா பேட்டி! | Salem green road is not necessary says jawahirullah

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (02/07/2018)

கடைசி தொடர்பு:04:00 (02/07/2018)

`சேலம் பசுமை வழிச் சாலை தேவையில்லாதது' - ஜவாஹிருல்லா பேட்டி!

நியாய விலைக்கடைகளில் 3 மாதம் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டை ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டனத்துக்குரியது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ஜவாஹிருல்லா  

திருவள்ளூரில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.  இதில் அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹச்.ஜவாஹிருல்லா கலந்து கொண்டு கட்சி கொடியை  ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,   ``சென்னையிலிருந்து சேலத்திற்கு 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பசுமை வழிச் சாலை தேவையில்லாதது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களிடம் கருத்து கேட்கும் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்தப் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற ஜூலை 3-ந் தேதி சேலத்தில் பொதுச் செயலாளர் அப்துல் சமத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கர்நாடக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழகத்திலும் விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்றுத் தமிழக அரசு கூட்ட வேண்டும். மேலும், நியாய விலைக் கடைகளில் 3 மாதம் தொடர்ந்து பொருட்களா் வாங்காத குடும்ப அட்டை ரத்து என்ற மத்திய அமைச்சர்  ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்தது கண்டனத்துக்குரியது. வக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.