வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (02/07/2018)

கடைசி தொடர்பு:08:52 (02/07/2018)

எதிர்க்கும் கர்நாடகா - இன்று டெல்லியில் காவிரி ஆணையக் கூட்டம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

காவிரி

காவிரி விவகாரம் தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஸ்கீம் அமைத்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு உடனடியாக வரைவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. பின்னர், ஸ்கீம் என்ற வார்த்தையும், மத்திய அரசின் வரைவுத் திட்ட தாக்கலும் பெரும் பிரச்னைகளைக் கிளப்பியது. மே மாதம் நடைபெற்ற கர்நாடகத் தேர்தலுக்குப் பின்னரே இந்த விவகாரம் அனைத்தும் முடிவுக்கு வந்தது. தேர்தலுக்குப் பின்னர், மத்திய அரசு தாக்கல்செய்த திட்ட அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையம் எனக் குறிப்பிட்டு தாக்கல்செய்தது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

பின்னர் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள், காவிரி மேலாண்மை ஆணையக் குழுவின் உறுப்பினர்களை அறிவித்தன. கர்நாடகா மட்டும் அவர்களது உறுப்பினர்களை காலம் கடந்து தாமதாக அறிவித்தது. சனிக்கிழமை கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 'காவிரி ஆணையத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகாவின் எதிர்ப்பையும் மீறி இன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல்  கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் குழுவின் இடைக்காலத் தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில், காலை 11 மணிக்கு  இன்றைய கூட்டம் நடைபெற உள்ளது.