1942 முதல் 2018 வரை படித்த மாணவர்கள் சந்திப்பு...76 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்

மகிழ்ச்சிக் கடலில் திளைக்கும் முன்னாள் மாணவர்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்ட ஆசிரியர்கள், எங்கு பார்த்தாலும் செல்ஃபி மோகம். இந்தக் காட்சிகள் எல்லாம் நடைபெற்றது கடலூரில். 1868 ம் ஆண்டு முதல் கடலூர் மஞ்சக்குப்பத்தில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும்  புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில்தான். இப்பள்ளி தொடங்கப்பட்டு, 150-வது ஆண்டு நடைபெறுவதை முன்னி்ட்டு, முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள்

பள்ளியின் முதல்வர்  அருள்நாதன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள்தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, பழைய மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், அடையாள அட்டை அல்லது பள்ளியுடன் தொடர்புடைய ஏதாவது ஒன்றைப் பெற்று பதிவுசெய்யப்பட்டது. இதில், 1942-ம் ஆண்டு படித்த மாணவர்கள் முதல் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயின்ற மாணவர்கள் குவிந்தனர். பள்ளியில் தற்போது பயின்றுவரும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் 4,268 பேர் ஒன்றிணைந்ததுதான், முந்தைய உலக சாதனையாக இருந்தது. தற்போது, இப்பள்ளியில் 5,152 பேர் ஒன்றிணைந்து புதிய சாதனை படைத்துள்ளனர். அத்துடன், அவர்கள் ஒரே நேரத்தில் கைக்குலுக்கிக்கொண்டதும் ஒரு சாதனையாகும்.

புனித வளனார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்

மேலும், பள்ளி விடுதியில் தங்கியிருந்த முன்னாள் மாணவர்கள் 759 பேர் பங்கேற்பதும், அவர்கள் 400 ஜோடிகளாகப் பங்கேற்று கைகுலுக்கிக்கொண்டதும் சாதனையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, ஒரே நேரத்தில் 3,000 பேர் தங்களது செல்போன் விளக்குகளை ஒளிரச் செய்ததையும் ஒரு சாதனையாகப் பதிவுசெய்யப்பட்டது. இதில், முன்னாள் மாணவர்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், முக்கியமான பொறுப்பு வகிக்கும் அரசு மற்றும் தனியார் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்து, தங்களின் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் இணைந்து, சமூக வலைதளங்கள்மூலம் மட்டுமே ஏற்பாடுசெய்தனர் என்பதும் குறிப்பிடத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!