முருகன் சிலை திருட்டில் முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றிய கருணாகரன் திடீர் மாற்றம்! சந்தேகம் எழுப்பும் அன்புமணி

பழநிமலை முருகனுக்கு ஐம்பொன்னில் சிலை செய்ததில் மிகப்பெரிய அளவில் நடந்த மோசடியில், முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், விசாரணை அதிகாரியான காவல்துறை துணை கண்காணிப்பாளர் கருணாகரன் திடீரென மாற்றப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அன்புமணி

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பழநி முருகன் கோயிலுக்கு ஐம்பொன் சிலை செய்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதுகுறித்த வழக்கின் விசாரணையில், அதிகாரி கருணாகரன் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முருகன் சிலை மோசடி வழக்கின் விசாரணை 20 நாள்களில் முடிவடையவிருந்த நிலையில், விசாரணை அதிகாரி மாற்றப்பட்டிருப்பது  இவ்விஷயத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்த ஐயத்தை அதிகரித்துள்ளது. காவல்துறைத் தலைவர் பொன்.மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணையில், தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் மற்றும் மோசடிகள் குறித்த உண்மைகள்  அடுத்தடுத்து அம்பலமாகிவருகின்றன. பழநிமலை முருகனுக்கு ஐம்பொன்னில் சிலை செய்ததில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்ததை இந்தப் பிரிவுதான் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல்துறை துணை கண்காணிப்பாளர் கருணாகரன், இவ்வழக்குகுறித்த முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படும் நிலையில்தான், கடந்த 29.06.2018 அன்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அவருக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல், கோவை மாவட்ட மின்திருட்டு தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் பழநி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றிவந்த வெங்கட்ராமன்,  முருகன் சிலை மோசடி வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது, இயல்பாக நடந்த மாற்றமாகத் தெரியவில்லை. பழநி மலை முருகன் சிலை மோசடி, தனித்த நிகழ்வாகத் தோன்றவில்லை. மாறாக, அதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளது. பழநி முருகன் கோயிலில் ஒன்பது மூலிகைகளால் உருவாக்கப்பட்ட  நவபாஷான முருகன் மூலவர் சிலை இருக்கும் நிலையில், புதிதாக ஐம்பொன் சிலை செய்யவேண்டிய தேவையில்லை. ஆனால், மூலவர் சிலையை மறைக்கும் வகையில் ஐம்பொன் சிலையை அமைத்தால், மறைவாக உள்ள நவபாஷான சிலையைப் பயன்பாட்டிலிருந்து அகற்றி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கடத்திவிடலாம் என்ற சதித்திட்டத்தின் அங்கமாகத்தான் புதிய சிலை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஐம்பொன் சிலை செய்வதிலேயே மோசடி நடந்து, அந்தச் சிலை கறுத்துவிட்டதால் ,ஒரு கட்டத்தில் அதை அகற்ற வேண்டியதாகிவிட்டது. அதனால்தான், நவபாஷான சிலை கடத்தலிலிருந்து தப்பியது.

இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் விவரங்களை ஆதாரங்களுடன் திரட்டியுள்ள கருணாகரன், அவர்களைக் கைதுசெய்ய ஆயத்தமான நிலையில்தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில், இதுவரை தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, முருகன் கோயிலின் முன்னாள் இணை ஆணையரும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினருமான கே.கே. ராஜா, முன்னாள் அதிகாரிகள் புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோர் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், புதிய கைது நடவடிக்கைகள் ஆட்சியாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால்தான், அதைத் தடுக்கும் வகையில் விசாரணை அதிகாரி கருணாகரண் மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சிலை கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணைக்காகக் கடந்த 27.06.2018 அன்று உயர் நீதிமன்றத்தில் நேர்நின்ற பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்குகளின் விசாரணையில் தமக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், தமக்கும், உயர் நீதிமன்றத்துக்கும் தெரியாமலேயே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும் குற்றஞ்சாற்றியிருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த உயர் நீதிமன்ற நீதிபதி,‘‘ உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மாற்றப்பட்டால், காவல்துறை தலைமை இயக்குநரை நீதிமன்றத்துக்கு அழைக்க நேரிடும்’’ என எச்சரிக்கை விடுத்தார். 

ஆனால், அதை சிறிதும் மதிக்காமல், அடுத்த இரண்டாவது நாளே, முக்கிய விசாரணை அதிகாரி மாற்றப்படுகிறார் என்றால், அதன் பின்னணியில் ஏதோ முக்கியத் தலைவரை காப்பாற்ற சதி நடப்பதாகத்தான் பொருள் ஆகும். இதை, அனைத்துத் தரப்பினரும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் மற்றும் மோசடிகளில் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிலை கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காகத்தான் பொன்.மாணிக்கவேல் தலைமையில் செயல்பட்டுவரும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரிகள், அதன் தலைவருக்கே தெரியாமல் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை உறுதிசெய்யும் வகையில்தான் அரசின் செயல்பாடுகள் உள்ளன. இந்து, சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் ஆலயங்களும், அவற்றில் உள்ள கடவுள் சிலைகளும் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை ஆகும். அதற்கு எதிரான வகையில் செயல்பட்டு சிலை கடத்தல் மற்றும் மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் . அதற்கு மாறாக, குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டால், மக்கள் கடுமையாகத் தண்டிப்பார்கள்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!