'அந்த அமைச்சர் அவமானப்படுத்துகிறார்!'  - எடப்பாடி பழனிசாமியிடம் குமுறிய அமைச்சர்கள்

இதேநிலைதான் பிற மாவட்டங்களின் அமைச்சர்களுக்கும். அந்த அமைச்சரின் துறை எனத் தெரிந்தால், அதற்குள் கால் நுழைப்பதில்லை. 'தேவையற்ற அவமானங்களைச் சந்திக்க நேரிடும்' என வெளிப்படையாகவே புலம்புகின்றனர்.

'அந்த அமைச்சர் அவமானப்படுத்துகிறார்!'  - எடப்பாடி பழனிசாமியிடம் குமுறிய அமைச்சர்கள்

கொங்கு மண்டலத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர்மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் சக அமைச்சர்கள். ' மரியாதை கிடைக்காத இடத்தில் மந்திரி பதவியை வைத்துக்கொண்டு என்ன பிரயோஜனம்?' என எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகக் கோபித்துக்கொண்டு சட்டசபைக் கூட்டத் தொடரையும் புறக்கணித்திருக்கிறார், அமைச்சர் கே.சி.வீரமணி. 

தமிழக வணிகவரித்துறை அமைச்சராக இருக்கிறார், அமைச்சர் கே.சி.வீரமணி. இவருடைய சொந்த மாவட்டமான வேலூரில், திட்ட இயக்குநர் ஒருவரின் உதவியாளருக்கு பணிமாறுதல் வழங்குவதற்கு ஏற்பாடுசெய்திருக்கிறார். இந்தத் துறை, கொங்கு மண்டல அமைச்சரின் கீழ் வருகிறது. பணிமாறுதல் வழங்கிய தகவல் அமைச்சரின் காதுகளுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது. ' என்னைக் கேட்காமல் எப்படி பணி மாறுதல் உத்தரவு வழங்கலாம்?' எனக் கொதித்தவர், சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்த அதிகாரி, அமைச்சர் கே.சி.வீரமணியைச் சந்தித்துக் குமுறியிருக்கிறார்.

தலைமைச் செயலகம்

 அதன்பின்னர் நடந்த விவகாரங்களை நம்மிடம் விவரித்தார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், " எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக, நிழல் முதல்வராகவே வலம் வருகிறார் அந்த அமைச்சர். அவருடைய மாவட்டத்தில் எந்தத் துறையில் பணிமாறுதல் நடக்க வேண்டும் என்றாலும், அவர் மனது வைத்தால்தான் முடியும். ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஃபேன்ஸி நம்பர் வேண்டும் என்றாலும் அவர் மனதுவைத்தால்தான் முடியும் என்ற அளவுக்கு செயல்படுகிறார். இவருடைய அத்துமீறலை அமைச்சர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுத் துறை அதிகாரிகளின் பணிமாறுதல் விவகாரத்தில் அமைச்சர்களோ, மாவட்ட செயலாளர்களோ முடிவெடுக்க முடியும். அந்தவகையில்தான், குரூப் 1 அதிகாரியான அந்த பி.ஏ-வுக்கு பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர், அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்துவிட்டார். இதுகுறித்து விளக்குவதற்காக, சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்திக்க அனுமதி கேட்டார் அமைச்சர் வீரமணி. பத்து நாள்களாக சந்திப்புக்கு அனுமதி கொடுக்காமல் அலைக்கழித்துவந்தார் அந்த அமைச்சர். 

அமைச்சர் வீரமணிஒருகட்டத்தில், தலைமைச் செயலகத்தில் அந்த அமைச்சரின் அறையிலேயே சந்தித்துப் பேசினார் வீரமணி. சஸ்பெண்ட்டுக்கு ஆளான அதிகாரியும் உடன் சென்றிருக்கிறார். வீரமணியை அருகில் வைத்துக் கொண்டே அந்த அதிகாரியைத் தாறுமாறான வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறார் அந்த அமைச்சர். இந்தத் திடீர் தாக்குதலை அமைச்சர் வீரமணியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அதன்பிறகு, அந்த அதிகாரியின் சஸ்பெண்டை ரத்துசெய்த அந்த அமைச்சர், இரண்டு 17 பி குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய உத்தரவிட்டிருக்கிறார். தற்போது, மதிய உணவுத் திட்டத்தில் பணிபுரிந்துவருகிறார் அந்த அதிகாரி. ' ஒரு 17 பி சார்ஜை கேன்சல் செய்வதே பெரும்பாடு. இதில், இரண்டு சார்ஜ் போடுவது எந்த வகையில் சரியானது?' என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை.

இதனால் நொந்துபோன அமைச்சர் கே.சி.வீரமணி, ' இந்த ஆள் ஒரு விசுவாசமான நட்பை இழந்துவிட்டார்' என சில நாள்களாகப் புலம்பிக்கொண்டிருக்கிறார். இதன் விளைவாக, ஒருநாள் சட்டசபைக் கூட்டத் தொடருக்கும் போகாமல் புறக்கணித்துவிட்டார். இதைப் பற்றி கேட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதற்குப் பதில் அளித்த வீரமணி, ' மரியாதை இல்லாத இடத்தில் மந்திரி பதவி மட்டும் எதற்கு? இப்படியொரு பதவியே தேவையில்லை' என கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.  அதன்பிறகு சம்பவத்தைக் கேள்விப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ' என்னுடைய கவனத்துக்கு இந்தச் சம்பவம் பற்றி வரவில்லை. என்னிடம் சொல்லியிருந்தால், நானே செய்துகொடுத்திருப்பேனே...' என சமாதானம் செய்துள்ளார். இந்த சமரசத்தை அமைச்சர் வீரமணி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்றார் விரிவாக. 

அ.தி.மு.க-வின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிட பேசினோம். " தொடக்க காலத்தில் இருந்தே சுயமரியாதை உணர்வுடன் செயல்படுபவர் அமைச்சர் வீரமணி. ஒருநாள்கூட அவர் ஜெயலலிதாவின் காலில் விழுந்ததில்லை. அமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுக்கும்போதும், ' ஆண்டவன் மீது ஆணையாக'  என அவர் கூறியதில்லை. அந்த வார்த்தை வரும் இடங்களில் எல்லாம் மவுனத்தைக் கடைப்பிடிப்பார். அப்படிப்பட்டவருக்கு இப்படியொரு அவமரியாதை நடந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது வரை அவர் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார். ' அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் அந்த அமைச்சர் பேசியிருப்பாரா?' என அ.தி.மு.க நிர்வாகிகளே கேள்வி எழுப்புகின்றனர். இதேநிலைதான், பிற மாவட்டங்களின் அமைச்சர்களுக்கும். அந்த அமைச்சரின் துறை எனத் தெரிந்தால், அதற்குள் கால் நுழைப்பதில்லை. ' தேவையற்ற அவமானங்களைச் சந்திக்க நேரிடும்' என வெளிப்படையாகவே புலம்புகின்றனர். அந்த அமைச்சரின் மாவட்டத்தில் உள்ள பிரமுகர்களிடம் கேட்டால், ' எடப்பாடியே நான் சொல்வதைக் கேட்டுத்தான் செயல்படுகிறார்' என அந்த அமைச்சர் பேசுவதாகச் சொல்கின்றனர். இதேநிலை நீடித்தால், அடுத்து வரும் தேர்தல்களில் மாவட்ட அமைச்சர்கள் யாரும் தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!