வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (02/07/2018)

கடைசி தொடர்பு:19:53 (02/07/2018)

``ஏலியன் உண்மையா... சூரியனுக்கு விண்கலமா?”- மயில்சாமி அண்ணாதுரை பேட்டி #VikatanExclusive

இரசாயன உரங்கள் இரண்டு மூட்டை இடுபொருளாக இட்டால் 30 மூட்டைகள் நெல் விளையும் என்று சொன்னோம்.  விவசாயிகளோ பேராசைப்பட்டு அதிகளவு இரசாயன உரங்களை பயன்படுத்தியதால் மண் வீணாகாமல் என்ன செய்யும்?

``ஏலியன் உண்மையா... சூரியனுக்கு விண்கலமா?”- மயில்சாமி அண்ணாதுரை பேட்டி #VikatanExclusive

யில்சாமி அண்ணாதுரை. பொள்ளாச்சி அருகே கோதாவாடி கிராமத்தில் ஏழ்மையான ஆசிரியர் குடும்பத்தில் மயில்சாமி-பாலசரஸ்வதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 5 முனைவர் பட்டங்களுக்கும் சொந்தக்காரர். இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் ஓர் அடிமட்ட அறிவியல் ஆய்வாளராகச் சேர்ந்து தன் கடுமையான உழைப்பாலும், கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்து, இன்று இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் இயக்குநராக இருக்கிறார்.  

நிலவுக்கு அனுப்பிய சந்திராயன்-1 மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய மங்கல்யான் ஆகிய அதி முக்கிய செயற்கைக் கோள்களின் திட்ட இயக்குநரும் இவரே. இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் 75க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். ``வளரும் அறிவியல்” என்ற அறிவியல் மாத இதழில் கௌரவ ஆசிரியாக இருக்கிறார். கட்டுரையாளர், கவிஞர், சிறந்த பேச்சாளர் என்ற பன்முகத்தன்மை கொண்டவர். இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமது தொடக்க நாள்களையும் சந்திராயன் பணிகள் பற்றியும் ``கையருகே நிலா” என்ற நூலைப் படைத்திருக்கிறார். இந்த நூலுக்காகச் சிவந்தி ஆதித்தன் விருதையும் பெற்றிருக்கிறார். தமிழகக் கல்வித்துறையில் 10 ம் வகுப்பு அறிவியல் பாடபுத்தகத்தில் இவரது வாழ்க்கை குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அப்துல்கலாம் போல மயில்சாமி அண்ணாதுரையும் தனது விடுமுறை நாள்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடுவதில் விருப்பம் கொண்டவர். அதைத் தொடர்ந்து செய்து வருகிறார்.  

மயில்சாமி அண்ணாதுரை

மயில்சாமி அண்ணாதுரைக்கு 60ம் வயது பூர்த்தி அடைவதையொட்டி (ஜூலை 2) நாகை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு மனைவி வசந்தியுடன் சஷ்டியப்தபூர்த்தி செய்ய வந்திருந்தார். ``விகடனுக்கு பேட்டி” என்று கேட்டதுமே இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார்.  

இனி அவரது பேட்டியிலிருந்து...

``நிலவுக்கு அனுப்பிய சந்திராயன்-1 விண்கலம் மூலம் கிடைத்த ஆய்வில் முக்கிய விஷயம் என்ன?”

``நிலவில் நீர் இருக்கிறது. உயிர்கள் வாழ்வதற்கு நீர் முக்கிய ஆதாரம். அதேநேரத்தில் அங்கு ஈர்ப்புவிசை குறைவாக இருக்கிறது. பகல் நேரத்தில் அதிக வெப்பமும், இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரி குளிராகவும் இருக்கிறது. பாலைவனத்தில்கூட தாவரங்களை உற்பத்திச் செய்ய முடியும் என்கிற நிலை இருக்கும்போது நிலவில் ஏன் செய்யமுடியாது? எனவே ஆய்வு தொடர்கிறது.”

``அமெரிக்காவின் நாசா கூட 18 முறை நிலவுக்கு விண்கலம் அனுப்பி தோல்வியடைந்து 19வது முறைதான் வெற்றி பெற்றது.  ஆனால், முதன் முதலில் ஏவிய சந்திராயன் வெற்றி பெற்றது எப்படி?” 

``தோல்விகளிலிருந்துதாம் பாடங்கள் கற்றுக்கொள்ளலாம். அமெரிக்கா நிலவுக்கு அனுப்பிய விண்கலத்தில் என்னென்ன தவறுகள் இருந்தன என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து அதற்கேற்ப சந்திராயன்-1 விண்கலத்தை வடிவமைத்தோம், வெற்றி கண்டோம்” 

``செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய மங்கல்யான் கொண்டு வந்த செய்தி என்ன?”

``செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்க முடியுமா? அப்படியானால், முதலில் ரோபோக்களை அனுப்பி அங்குள்ள மண்ணை எடுத்து செங்கல் உருவாக்கி முப்பரிமான வீடுகள் கட்ட முடியுமா? என்று ஆராய்கிறோம். இதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால் இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன.”

``சூரியனைச் சுற்றியே அனைத்துக் கோள்களும் இயங்கும் நிலையில் சூரியனுக்கே ஆதித்யா என்ற செயற்கைக் கோளை ஏவும் திட்டம் இஸ்ரோவில் உள்ளதா?”

``ஆமாம், சூரியன்தான் அனைத்துக் கோள்களின் சக்திக்கு ஆதாரம். சூரியன் ஓர் அணுஉலை மாதிரி. சூரிய வெப்பம் ஒரு நேரத்தில் அதிகமாகவும், மற்றொரு நேரத்தில் குறைவாகவும் உள்ளது. அது ஏன் என்று ஆராய்ந்தோம். அதன் அடிப்படையில், சூரியனின் புவிஈர்ப்பு சக்தியும், பூமியின் புவிஈர்ப்பு சக்தியும் சந்திக்கும் புள்ளியில் ஆதித்யா விண்கலத்தை அனுப்பி அதன்மீது விண்கலம் சுற்றிவர ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த விண்கலம் ஒரு பக்கம் சூரியனையும், மறுபக்கம் பூமியையும் ஆய்வு செய்யும்.  சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க பகலில் 6 மணிநேரம் சூரிய ஒளி தேவை. மழைக்காலத்தில் சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியாது. எனவே, சூரிய ஒளியை இரவிலும் கொண்டுவர முடியுமா என்பதையும் ஆதித்யா ஆய்வு செய்யும்” 

``வேற்றுக் கிரகத்திலிருந்து ஏலியன்கள் அடிக்கடி பூமிக்கு வந்து போகிறார்கள் என்று செய்தி வருகிறதே. இது உண்மையா?

``இதற்கான ஆதாரமில்லை. தேடல்கள் இருக்கு. இது தொடர்பாகவும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.” 

``விண்வெளி செல்லும் வீரர்களுக்குச் சீக்கிரமே முதுமை வந்துவிடுகிறது என்கிறார்களே?”

``ஆமாம். விண்வெளி வீரர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் வெகுவிரைவில் முதுமை வந்துவிடுகிறது. அதனைக் குறைக்கவும், அதேநேரத்தில் அனைத்து மனிதர்களுக்கும் முதுமையைக் குறைக்கவும் ஆய்வுகள் நடக்கின்றன.” 

``செல்போன்கள் மூலம் ஏற்படும் கதிர்வீச்சு அதனைப் பயன்படுத்துவோரையும் பாதிக்குமா?”

``முதலில் கதிர்வீச்சே இல்லாமல் ஒலி அலைகளைக் கொண்டே ரேடியோ பயன்பாட்டில் இருந்தது. அதன்பின் கம்பி வழியே டெலிபோன்கள், தந்தி போன்றவை இயங்கின. இதனால் யாருக்கும் பாதிப்பில்லை. ஆனால், தற்போது கதிரியக்க வீச்சு மூலம் இயங்கும் செல்போன்களை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். அதனை அதிகமாகப் பயன்படுத்தினால் மனித உடலில் கதிர்வீச்சு ஊடுறுவி நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்” 

``பாரம்பர்ய இயற்கை விவசாயம் செய்த விவசாயிகளை ரசாயன உரங்களை பயன்படுத்த சொன்னது விஞ்ஞானிகள்தானே? இதனால் மண்ணும் பாழானது, மனிதர்களும் நோயாளிகள் ஆகிவிட்டார்களே!”

``ஒரு ஏக்கர் வெறும் 15 மூட்டைகள் அறுவடை செய்த காலம் இருந்தது. ரசாயன உரங்கள் இரண்டு மூட்டை இடுபொருளாக இட்டால் 30 மூட்டைகள் நெல் விளையும் என்று சொன்னோம். விவசாயிகளோ பேராசைப்பட்டு அதிகளவு இரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால் மண் வீணாகாமல் என்ன செய்யும்? அமுதமே என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் விஷம்தானே?”

``ஒரு நேரத்தில் புயல், மழை, வெள்ளம் ஏற்படுகிறது.  மறுநேரத்தில் கடும் வறட்சி ஏற்படுகிறது.  இதைச் சீரமைக்க முடியாதா?” 

``இந்தியாவில் மழை இயற்கையாகவே இருந்ததால் இதற்கான ஆய்வு தேவைப்படவில்லை. ஆனால், மழையை ஏற்படுத்தவும், மழையைக் குறைக்கவும் முடியுமா என்றால் என்னைப் பொறுத்தவரையில் சாத்தியம்தான். இதனை எல்லா நாடுகளும் கூட்டாகச் சேர்ந்துதான் ஆய்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் இது அணு ஆயுதப் போரைவிட பெரிய அழிவை உண்டாக்கிவிடலாம். ஒரு நாட்டுக்கு மழையில்லாமல் செய்துவிடலாம். ஒரு நாட்டுக்கு அதிக மழையைப் பொழிய வைத்து அழிவைத் தந்துவிடலாம். எனவே, இதன் முக்கியத்துவம் உணர்ந்து அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்; நிச்சயம் முடியும்” 

``அறிவியல் உலகில் உங்களை இளைய கலாம் என்றழைப்பது பற்றி. . .?”

``என்மீதுள்ள அன்பினால் அழைக்கிறார்கள், அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று சிரித்தபடியே விடைகொடுத்தார்.  

மயில்சாமி அண்ணாதுரையின் பதவிக்காலம் ஜுலை 31ம் தேதியோடு முடிவடைகிறது. இவரது பணி ஓய்வுக்குப் பிறகு பல வெளிநாடுகள் இவரைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை இந்தியா அளிக்கக் கூடாது. அதற்குமுன் இவர் இஸ்ரோவில் பணியைத் தொடர மத்திய அரசு வாய்ப்பளிக்க வேண்டும். அப்துல்காலம் போலவே மயில்சாமி அண்ணாதுரையையும் இந்தியா முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே இந்தியர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.  


டிரெண்டிங் @ விகடன்