சச்சின் நிதியில் சாலை... முறைகேட்டைத் தடுக்க களத்தில் இறங்கிய பெரம்பலூர் கலெக்டர்

சச்சின் டெண்டுல்கரின் நிதியிலிருந்து சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதில், எந்த விதத்திலும் முறைகேடு நடந்துவிடக் கூடாது என்று நேரடியாகவே களத்தில் இறங்கிய பெரம்பலூர் கலெக்டர் சாந்தா, சாலைப் பணியை பார்வையிட்டுவருகிறார்.

பெரம்பலூர் கலெக்டர் சாந்தா

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எளம்பலூர் ஊராட்சியில், மாநிலங்களவை உறுப்பினரும், பிரபல கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.21.70 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலைப் பணிகளை பெரம்பலூர் ஆட்சித்தலைவர் சாந்தா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகரப் பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒருபகுதியாக, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எளம்பலூர் ஊராட்சியில் உள்ள கோல்டன் சிட்டி என்னும் பகுதியில், ரூ.21.70 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 500 மீட்டர் நீளத்தில் தார்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தச் சாலை, 3.75 மீட்டர் அகலத்திலும் 20 செமீட்டர் தடிமனிலும் வெட்மிக்ஸ் கொண்டு அமைக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, 2 அடுக்காக தார்சாலை போடப்பட உள்ளது. இந்தச் சாலை அமைப்பதன்மூலம் கோல்டன்சிட்டியில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், செயற்பொறியாளர் ஜோஸ்பின் நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், முரளிதரன், ஒன்றியப் பொறியாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!