சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்க்கவில்லை! மு.க.ஸ்டாலின் பேச்சு

``சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை தி.மு.க எதிர்க்கவில்லை. மக்களிடம் கருத்துக் கேட்டு இந்தத் திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று சொல்கிறோம். ஆனால், நாங்கள் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக எதிர்ப்பதாக முதல்வர் எடப்பாடி சொல்கிறார்'' எனத் தஞ்சாவூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தஞ்சாவூரில்  நடைபெற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்ல திருமணத்தை தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு  நடத்திவைத்தார். இதில், துர்கா ஸ்டாலின், உதயநிதி மற்றும் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய ஸ்டாலின், எட்டு வழிச் சாலை திட்டத்தை காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக தி.மு.க எதிர்க்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இந்தத் திட்டத்தை தி.மு.க எதிர்க்கவில்லை. இதன்மூலம், பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். லட்சக்கணக்கில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால், மக்கள் போராடிவருகிறார்கள். அவர்களிடம் கருத்தைக் கேட்டு, பின்னர் நடைமுறைப்படுத்துங்கள் என்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இருந்துகொண்டு, அனைவரின் ஒப்புதலைப் பெற்றுதான் எட்டு வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படுவதாகச் சொல்கிறார்.

விமான நிலையத்தில் இப்படிக் கூறுபவர், அந்த மக்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று இதுபோல பேட்டி கொடுக்க திராணி இருக்கிறதா. கமிஷனுக்காகத்தான் இந்த எட்டு வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படுவதாக நாங்கள் சொல்கிறோம். டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது, நான்கு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில், தி.மு.க கமிஷன் வாங்க வில்லையா என்கிறார்கள். அப்படி இருந்தால், டி.ஆர்.பாலுமீது வழக்குப் போடுங்கள். நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இதேபோல, நாங்கள் கொண்டுவந்த சேது சமுத்திரத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. அப்போது கருணாநிதி, ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படுகிறது என்றால் அவ்வாறு ஆகாத வகையில் மாற்று வழியில் திட்டத்தைச் செயல்படுத்துங்கள் என்றார். அந்தத் திட்டத்தின் பெயரைக்கூட ராமர் பாலம் திட்டம் என்றும் மாற்றலாம் என்றார். அதன் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

மேலும், தமிழகத்தில் இதுவரை 31,000 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அத்தனையும் எதிர்கொண்டு, நாங்கள் சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என எடப்பாடி பெருமையாகச் சொல்கிறார். ஒரு வக்கற்ற அரசாக இருப்பதால்தான், இதுபோன்ற தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி தலைமையிலான அரசு கமிஷன், கரப்ஷன், லஞ்சம், மாமூல் என நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக தி.மு.க சார்பில் விஜிலென்ஸ் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவிலேயே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இதன்மூலம், எந்தத் திட்டத்தில் எவ்வளவு கமிஷன், லஞ்சம் வாங்கியுள்ளனர் எனத் தெரியவரும். அதன்பிறகு, ஆட்சியில் இருப்பவர்கள் சிறைக்குச் செல்வார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் கமிஷன், லஞ்சம் பெற்ற ஆளும்கட்சியினர், நிச்சயமாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!