வெளியிடப்பட்ட நேரம்: 14:12 (02/07/2018)

கடைசி தொடர்பு:14:26 (02/07/2018)

ஜாமீனில் வந்தார்... போலீஸுக்கு டிமிக்கி... எஸ்கேப் ஆன ரவுடி பினு

சி.டி.மணி எதிரி ரவுடி பினு

இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிரபல தாதா சி.டி மணியை போலீஸார் சமீபத்தில் கைதுசெய்தனர். சி.டி மணியின் எதிரியான ரவுடி பினு தலைமறைவாகியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. 

கேரளாவைச் சேர்ந்த ரவுடி பினு, சென்னையில் செட்டிலானார். தென்சென்னையில் கலக்கிய அவர், நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்தார். தேடப்படும் குற்றவாளியாக போலீஸார் அறிவித்தபோதிலும், கரூரில் கூண்டு கட்டும் தொழிலாளியாக ரகசியமாக வாழ்ந்துவந்தார். ரவுடி பினுவின் தலைமறைவு வாழ்க்கை, அவரின் எதிரிகளின் ஆதிக்கத்தை அதிகரிக்கவைத்தது. இதனால், ரவுடி பினுவின் ஆதரவாளர்கள் மீண்டும் அவரை களத்தில் இறக்கத் திட்டமிட்டனர். 

இதற்காக, பினுவின் பிறந்தநாளை வெகுசிறப்பாகக் கொண்டாட முடிவுசெய்தனர். சென்னை மாங்காட்டை அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில் உள்ள லாரி செட்டில், பிறந்தநாளுக்கான ஏற்பாடுகள் நடந்தன. அவரின் கூட்டாளிகள் பலர் அங்கு திரண்டனர். அரிவாளால் கேக்கை வெட்டி, கூட்டாளிகளை மகிழ்வித்தார் ரவுடி பினு. தகவலறிந்த போலீஸார், இடையில் நுழைந்து பினுவைப் பிடிக்க முயன்றனர். ஆனால், பினு மற்றும் அவரின்  கூட்டாளிகளில் முக்கியமானவர்கள் தப்பினர். இருப்பினும், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பலரைக் கைதுசெய்தது. அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி, கார், பைக் ஆகியவற்றையும் பறிமுதல்செய்தனர். பினுவைப் பிடிக்க போலீஸார் ஸ்கெட்ச் போட்டனர். இதற்கிடையில், சில நாள் தலைமறைவுக்குப் பிறகு பினு, பிப்ரவரி மாதத்திலேயே போலீஸில் சரணடைந்தார். ஒரே நேரத்தில் கூட்டாகப் புழல் சிறையில் அடைக்கப்பட்டதால், அங்கு அசாதாரணச்சூழல் நிலவியது. இதையடுத்து, சிலர் இடம் மாற்றப்பட்டனர். 

சி.டி.மணி

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரவுடி பினுவுக்கு ஜாமீன் கிடைத்தது. சிறையிலிருந்து வெளியில் வந்த பினு, தற்போது தலைமறைவாகிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அவரின் ஜாமீனை நீதிமன்றத்தின்மூலம் ரத்துசெய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். ரவுடி பினுவுக்கும், அவரின் பரம எதிரியான அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி ராதா என்கிற ராதாகிருஷ்ணனுக்கும் நீண்ட கால மோதல் இருந்துவருகிறது. தற்போது, ராதாவும் சிறையில் உள்ளார். ராதாவின் நண்பர் ரவுடி சி.டி மணியை போலீஸார் நீண்ட காலத்துக்குப் பிறகு சமீபத்தில் கைதுசெய்துள்ளனர். சி.டி.மணி சிறைக்குள் இருக்க, சிறையிலிருந்து பினு வெளியேறினார். தற்போது, பினு தலைமறைவாக இருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சில நாள்களுக்கு முன்புதான், புழல் சிறையில் ரவுடி பாக்ஸர் முரளி கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதுபோல மீண்டும் ஓர் அசம்பாவிதச் சம்பவம் நடைபெறாமலிருக்க, போலீஸார் சிறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமறைவான பினுவைக் கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.