"தம்பி.. பார்ட்டில எத்தனை வருஷமா இருக்கீங்க?" - அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை தமாஷ்! | local body election and admk strategy

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (02/07/2018)

கடைசி தொடர்பு:14:38 (02/07/2018)

"தம்பி.. பார்ட்டில எத்தனை வருஷமா இருக்கீங்க?" - அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை தமாஷ்!

`கடைசிக் கெடு என அறிவிக்கப்பட்ட நாளில் மட்டும் எப்படி இவ்வளவு பேரைச் சேர்க்க முடிந்தது, மாவட்டச் செயலாளர்கள் `மிஸ்' ஆகாமல் ஆஜரானது எப்படி?' என்ற குழப்பத்தில் தொண்டர்கள் இருக்கிறார்கள். 

.தி.மு.க. சட்டதிட்ட விதி-30 பிரிவு 2-ன் படி கட்சியின் அமைப்புத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். உறுப்பினர் சேர்ப்புப் படிவம் ஒன்றில் 25 பேர் வரை சேர்க்கலாம். படிவத்தின் விலை 5 ரூபாய். கடந்த ஜனவரி 29 ம் தேதி படிவங்களைத் தலைமைக்கழகத்தில் கொடுக்க ஆரம்பித்தார்கள். படிவத்தை வாங்கிப் போக, யாரும் ஆர்வம் காட்டாததால், படிவங்கள் தலைமைக் கழகத்திலேயே தேங்கின. பதறிப்போன ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்., இருவரும், ``அ.தி.மு.க. உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பங்கள் 1.3.2018 முதல் 31.3.2018 வரைதான் பெறப்படும்" என்று கண்டிப்பு காட்டி அப்போது அறிக்கை வெளியிட்டனர். அதன் பின்னரும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவில்லை. வேறு வழியின்றி கடந்த மே 1 ம் தேதி, மீண்டும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். 

அதில், ``உறுப்பினர் பதிவைப் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்த்தலுக்கான காலக்கெடுவை நீட்டித்துத் தருமாறு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வைத்த வேண்டுகோளை ஏற்று புதிய உறுப்பினர் சேர்ப்பு, புதுப்பிப்புக்குக் காலக்கெடு 31-5-2018 வரை நீட்டிக்கப்படுகிறது" என்று சொல்லிய வகையில், படிவம் வாங்குவதை மேலும் தள்ளிப் போட்டனர். கடந்த 30.6.2018 அன்றுதான், படிவங்களை ஒப்படைக்க இறுதி நாள் என்பதால், பல மாவட்டங்களிலிருந்து, பூர்த்தியான விண்ணப்பங்களுடன், மாவட்டச் செயலாளர்கள் திரண்டனர். `கடைசிக் கெடு என அறிவிக்கப்பட்ட நாளில் மட்டும் எப்படி இவ்வளவு பேரைச் சேர்க்க முடிந்தது, மாவட்டச் செயலாளர்கள் `மிஸ்' ஆகாமல் ஆஜரானது எப்படி?' என்ற குழப்பத்தில் தொண்டர்கள் இருக்கிறார்கள். 

இதன் பின்னணி குறித்து தொண்டர்கள் மட்டத்தில் விசாரித்தோம். ``அவரவர் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரியை வரிசை மாறாமல் அப்படியே எழுதி, அதையே உறுப்பினர் படிவத்தில் சேர்த்துள்ளனர். கட்சித் தொண்டர்களைப் போய்ப் பார்த்து, அவர்களுடன் பேசி யாரையும் உறுப்பினராகச் சேரச் சொல்லும் தைரியம் மாவட்டச் செயலாளர்களுக்கு இல்லை. `ஒரு படிவத்துக்கு 25 பேர், 250 படிவத்தை வாங்கு, இரண்டரை லட்ச ரூபாயைக் கொண்டு போய் தலைமைக்கழகத்தில் கட்டி விடு' என்ற முடிவுக்கு மாவட்டச் செயலாளர்கள் வந்துவிட்டனர். தொண்டர்களைப் போய்ப் பார்த்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து வாங்குவதே தனிக்கலை. ஒரு பாகத்துக்கு 15 முதல் 25 பொறுப்பாளர்களைப் போட்டு, அந்தப் பொறுப்பாளர்கள் ஒவ்வொரு தொண்டனின் வீட்டையும் தேடிப்போய்ப் பார்த்து, நலம் விசாரித்து படிவத்தில் கையெழுத்து வாங்குவார்கள். இந்தப் படிவத்துக்குத் தன் சார்பில் இன்னொருவர் பணம் செலுத்துவதையே கௌரவக் குறைச்சலாய்ப் பார்க்கிற தொண்டர்கள்தாம் அதிகம். இப்போது உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பதில், எத்தனை பேர் கட்சிக்காரர்கள் என்பது சேர்த்தவருக்கும் தெரியாது, `கட்சியில் நாம் இருக்கிறோமா' என்பது தொண்டர்களுக்கும் தெரியாது.

அதிமுக, தேர்தல்

விண்ணப்ப மனுவோடு யாராவது ஊருக்குள் வந்தால், `எங்கள் நலனுக்காகவோ, கட்சியின் கிளைக்கழகம் முதல் ஒன்றியம், தொகுதிக் கழக நலனுக்காகவோ இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள்?. முன்னாள் கவுன்சிலர்கள், சேர்மன்கள் இன்னமும் பதவியில் இருப்பது போலவே, அதிகாரம் குறையாமல் இருக்கிறார்கள். முதலில் நீங்கள் இங்கிருந்து போய் விடுங்கள்' என்று விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசாங்கம் நியமித்த பொறுப்பு அதிகாரிகள், முன்னாள் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளின் சொல் மீறி நடப்பது இல்லை. `சொல்கிற வேலை நடக்க வேண்டும், அதைச் செய்யத்தான் பழைய உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் இருக்கிறார்களே பிறகு எதற்கு, உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தல்?' என்ற நிலைதான் இருக்கிறது. ஊருக்கு ஊர், வார்டுக்கு வார்டு தொண்டர்கள் காத்துக் கிடக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், பொறுப்பு அதிகாரிகளின் பதவியை மட்டும் மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டித்துள்ள காரணம், பெரும்பான்மையாக ஜெயித்தால் என்ன நடக்குமோ அதுதான் இப்போதே நடந்துகொண்டிருக்கிறது. இதனால், தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு நடத்தவில்லை என்று சொல்வது பொருத்தமற்றது.", என்று சொல்கிறார்கள். 

2013 ம் ஆண்டு கணக்குப்படி, அ.தி.மு.க.வில் 1 கோடியே 63 லட்சம் பேர் அடிப்படை உறுப்பினர்களாக இருந்தனர் என்பது கட்சி சொல்லும் தகவல். 2018-ல் உறுப்பினர் எண்ணிக்கை கூடுதலாக எகிறியிருக்குமா என்பது கேள்விக்குறிதான். விண்ணப்பப் படிவ விளையாட்டு, `லீக்' ஆகிய வகையில், சென்னையில் பலருக்கு போன் போயிருக்கிறதாம், ``தம்பி, நீங்க நம்ம பார்ட்டியில எந்த வருஷத்துல இருந்து இருக்கீங்க?" என்று, இரட்டை இலை வட்டாரத்தில் அன்பொழுக விசாரிக்க ஆரம்பித்துள்ளனராம்!


டிரெண்டிங் @ விகடன்