வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (02/07/2018)

கடைசி தொடர்பு:16:26 (02/07/2018)

புதுச்சேரியில் ரூ.7,500 கோடி வரியில்லா பட்ஜெட் தாக்கல்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மொத்தமாக வெளிநடப்பு செய்தன.

நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி கூடியது. பட்ஜெட் கூட்டத்தொடர் என்று அறிவித்து கூட்டப்பட்ட அந்தக் கூட்டம், பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி தராததால் ஜூன் 4 மற்றும் 5 என இரு தினங்களும் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து பேரவை காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  முதல்வர் நாராயணசாமி டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அனுமதி பெற்றார். ஆனாலும், சபாநாயகர் மற்றும் சில அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுவிட்டதால் அப்போது பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது நிதித்துறைப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி 7,530 கோடி ரூபாய்க்கு வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசிக்கத் தொடங்கினார்.

அதிமுக

அப்போது கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் எழுந்து அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், போஸ்டர்களையும் ஏந்திக்கொண்டு பேச ஆரம்பித்தனர். அதே போல பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமியும் எழுந்து அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசத் தொடங்கினார். அதன் காரணமாகப் பேரவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க வெளிநடப்பு செய்தன.

என்.ஆர்.காங்கிரஸ்

``கடந்த பட்ஜெட்டில் அறிவித்த எதையும் புதுச்சேரி அரசு செய்யவில்லை. மாநில அந்தஸ்தே எங்கள் நிலை. சிறப்பு மாநில அந்தஸ்து என்பது கிடைக்காத ஒன்று" என்றார் எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி. அதேபோல, ``பட்ஜெட் போட முடியாமல் இருந்த இந்த அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம்" என்றார் அ.தி.மு.க சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அன்பழகன்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க