பாலியல் குற்றச்சாட்டில் ஈ.வி.கே.எஸ் தம்பி! -பின்னணியில் நடந்தது என்ன?

  ஈ.வி.கே.எஸ்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தம்பி இனியன் சம்பத் மீது போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை நீலாங்கரை போலீஸ் நிலையத்தில், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பரபரப்பான புகாரை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், ''காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தம்பி இனியன்  சம்பத் என்பவர், தன்னிடம் பாலியல்ரீதியாக போனில் பேசியுள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, ஆடியோ ஆதாரத்தையும் போலீஸிடம் அவர் கொடுத்துள்ளார். அதன்அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இனியன் சம்பத்தின் உறவினர்தான் எங்களிடம் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த ஆடியோவில் பேசியது இனியன் சம்பத்தின் குரலா என்று ஆய்வு நடத்திய பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அந்த ஆடியோவில் ஆண், பெண் குரல்கள் இடம்பெற்றுள்ளன. பாலியல் ரீதியான உரையாடல்கள் உள்ளன. இனியன்  சம்பத் குரல் என்று தெரியவந்தால் மட்டுமே அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இந்தப் புகார்குறித்து இனியன் சம்பத்திடம் பேசினோம். "என்னுடைய மனைவியின் சகோதரி லதா, அவரது மகள் ஜெயபிரதி ஆகியோர் எங்களுடைய வீட்டில்தான் இருந்தனர். வீட்டிலிருந்து ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் திருட்டுப்போனது. அதுகுறித்து லதா, ஜெயபிரதியிடம் விசாரித்தோம். அப்போது அவர்கள், நகைகள் திரும்ப வந்துவிடும் என்று கூறினர். இந்தச் சமயத்தில்தான் என்மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர். ஏற்கெனவே, லதா, ஜெயபிரதி மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளேன். அதற்கு போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், என்னை போலீஸாரும், லதா தரப்பினரும் மிரட்டுகின்றனர்" என்றார்.

திராவிடக் கட்சிகளின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த ஈ.வே.கே.சம்பத்தின் இளைய மகனும், இளங்கோவனின் தம்பியுமானவர்தான் இனியன் சம்பத். இவர், காங்கிரஸில் இருந்தார். அதன்பிறகு அ.தி.மு.க-வில் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அம்மா தி.மு.க என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிவிட்டு அமைதியாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!