புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

பட்ஜெட்

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர்  நாராயணசாமி 7,530 கோடி ரூபாய்க்கான 2018-19 ஆண்டின் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அப்போது புதுச்சேரி அரசின் மொத்தக் கடன் தொகை 7,730 கோடி ரூபாய் என்றும் 2018-19-ம் ஆண்டின் தனி நபர் வருமானம் 1,95,000 ரூபாய் என பட்ஜெட்டில் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

* அரசின் வேளாண் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையங்களை ஒருங்கிணைத்து விவசாயப் பல்கலைக்கழகம் நிறுவப்படும்.

* கால்நடை சேவைக்காக 24 மணிநேரமும் செயல்படும் இரு சக்கர அவசர ஊர்தி சேவை தொடங்கப்படும்.

* வறுமையில் வாடும் 700 கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

* உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* புதுச்சேரி-காரைக்காலில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் 103 ஏக்கர் இடங்கள் இலவச மனைப்பட்டாவுக்கும், அரசு கட்டடடத்துக்கும் பயன்படுத்தப்படும்.

* கிராமப்புறங்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படும்.

* ஆட்டோ ரிக்‌ஷா தொழிலாளர்கள் நலனுக்காக தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படும்.

* “அட்சயப் பாத்திரம்” என்னும் தன்னார்வலர் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துமிக்க மதிய உணவு வழங்கப்படும். இதன் மூலம் 50,000 மாணவர்கள் பயன்பெறுவர்.

* காரைக்காலில் 400 கோடி ரூபாயில் ஜிப்மர் மருத்துவமனை கட்டும் பணி விரைவில் தொடங்கும்.

* 1,03,435 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

* அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனி வாரியமும், ஆட்டோ ரிக்க்ஷா தொழிலாளர்களுக்கு நல வாரியமும் அமைக்கப்படும்.

* கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 50% மானிய விலையில் உணவு வழங்க நடமாடும் உணவகம் அமைக்கப்படும்.

* கோனேரிக்குப்பம் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 35 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்படும்.

* தனியார் பங்களிப்புடன் 120 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

* கிராமப்புற வசதிகளை மேம்படுத்த முதல்வர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், கிராமப்புற தொகுதிகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* கேரளா மற்றும் கோவா மாநிலங்களைப் போல் 153 கோடி ரூபாய் செலவில் மனமகிழ் சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, பாரம்பர்ய சுற்றுலா போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* ஆதிதிராவிடர் கலப்புத் திருமண நிதி 1 லட்சத்தில் இருந்து 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

* முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்துக்கு நடப்பாண்டில் 365 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* 30 தொகுதிகளுக்கு தலா 300 பேர் என 9000 பேருக்கு கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்படும்.

கிராமப்புற பெண்களின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் “தேனும் நானும்” (Be&Me) என்ற தேனீ வளர்ப்புத் திட்டம் அனைத்துக் கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதில் ஈடுபடும் மகளிருக்கு வங்கிக் கடன் மற்றும் 40% மானியத்துடன் உபகரணங்களை வழங்குவதோடு, அதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படும். மேலும். அவர்கள் உற்பத்தி செய்யும் உப பொருள்களை காதி மற்றும் கிராமப்புற தொழில் வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்திட வழிவகை செய்யப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!