மருத்துவக் கலந்தாய்வு மாணவர்களின் முதன்மையான தேர்வாக சென்னை மருத்துவக் கல்லூரி!

சென்னையில் இன்று தொடங்கிய பொதுப்பிரிவுக்கான மருத்துவக் கலந்தாய்வில் மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். கலந்தாய்வின் தொடக்கமாக, தருமபுரி மாவட்டம் பொம்மிடியைச் சேர்ந்த மாணவன் ராஜ் சந்தூர் அபிஷேக் சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்க, அடுத்தடுத்து கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களும் சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து ஆச்சர்யப்படுத்தினர்.

மருத்துவக் கலந்தாய்வு

பொதுப்பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். கலந்தாய்வில் கலந்துகொண்ட முதல் 10 மாணவர்களுக்கு மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீட்டை வழங்கினார் அமைச்சர். மருத்துவக் கலந்தாய்வில் முதலிடம் பிடித்த கீர்த்தனா டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர திட்டமிட்டு உள்ளதால் இரண்டாம் இடம்பிடித்த ராஜ் சந்தூர் அபிஷேக் முதலாவதாகச் சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்தெடுத்துள்ளார். அதற்கு அடுத்து நான்காவது இடம்பிடித்துள்ள முகமது சாஹிப் ஹாசனும் சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தார்.

ராஜ் சந்தூர் அபிஷேக்கிடம் பேசினோம். ``பத்தாம் வகுப்பு வரை தமிழ்நாட்டிலும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பை ஆந்திராவிலும் படித்தேன். அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள். என்னுடைய இரண்டு சகோதரிகளும் மருத்துவம் படித்து வருகின்றனர். நானும் மருத்துவத்துறையில் நுழைந்திருக்கிறேன். அறுவைசிகிச்சை துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருக்கிறது" என்றார். 

இரண்டாம் இடம்பிடித்துள்ள முகமது சாஹிப் ஹாசன், ``அப்பா ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள பள்ளியில் படித்து நீட் தேர்வில் 644 மதிப்பெண் பெற்றுள்ளேன். நானும் சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அடுத்து எந்தத் துறையில் சிறப்பு பெறுவது என்பது எம்.பி.பி.எஸ் படித்து முடித்த பின்பே முடிவெடுக்கவுள்ளேன்" என்றார். 

தரவரிசைப் பட்டியலில் 11 வது இடம்பிடித்துள்ள சென்னையைச் சேர்ந்த சுப்ரஜா, ``பத்தாம் வகுப்பு வரை வளசரவாக்கம் பள்ளியிலும்,
11 மற்றும் 12-ம் வகுப்பை சென்னையில் உள்ள மற்றொரு பள்ளியிலும் படித்தேன். என் அப்பா தனியார் நிறுவனத்தில் பொறியாளராக உள்ளார். முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் 613 மதிப்பெண் கிடைத்தது. சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். வருங்காலத்தில் இதயநோய்ப் பிரிவில் சிறப்பு மருத்துவராக ஆக வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருக்கிறது" என்றார். 
மருத்துவக் கலந்தாய்வுக்கான தர வரிசையில் முதல் 10 இடம் பிடித்தவர்களில் இரண்டு பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மற்றவர்கள் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!