வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (02/07/2018)

கடைசி தொடர்பு:17:20 (02/07/2018)

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மற்ற ஆசிட்களும் 30 நாள்களுக்குள் வெளியேற்றப்படும் - ஆட்சியர் தகவல்

``தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து இதுவரை 2,124.78 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றப்பட்டதையடுத்து, மேலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள மற்ற ஆசிட் மற்றும் மூலப்பொருள்கள் இன்னும் 30 நாள்களுக்குள் முழுமையாக வெளியேற்றப்படும்” என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

sandeep nanthoori - thoothukudi collector

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டையடுத்து கடந்த மே 28-ம் தேதி, இந்த ஆலை நிரந்தரமாக மூடப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆலையில் சல்பியூரிக் ஆசிட் சேமிப்புக் கொள்கலனில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து சல்பியூரிக் ஆசிட்டை வெளியேற்றும் பணியில் கடந்த ஜூன்,18-ம் தேதி முதல் 7 நாள்களாக ஈடுபட்டனர்.

இதுவரை 94 டேங்கர் லாரிகள் மூலம் 2,124.78 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றப்பட்டது. இதில், கொள்கலனில் அடிப்பகுதியில் கழிவுகளுடன் கூடிய சல்பியூரிக் ஆசிட் இருந்ததால் அதை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், சல்பியூரிக் ஆசிட் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ``சல்பியூரிக் ஆசிட் கசிவைப் போல, மேலும், ஏதாவது ஆசிட் கசிவுகள் உள்ளதா? மற்ற சேமிப்புக்கலன்களின் இருப்பு நிலை, அதன் தன்மைகள் குறித்தும், சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி.,யின் ஓய்வு பெற்ற பேராசிரியர், அண்ணா பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி, தொழில்துறை ஆய்வாளர்கள், மாநகராட்சி ஆணையாளர், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழுவின் ஆய்வில் ஈடுபட்டனர். அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் இன்று முதல் 30 நாள்களுக்குள் மீதம் உள்ள ஆசிட் மற்றும் மூலப் பொருள்கள் வெளியேற்றப்படும்.

சல்பியூரிக் ஆசிட் தவிர பாஸ்பாரிக் ஆசிட், ஜிப்சம், கேஸ், டீசல், தாமிரத் தாதுக்கள், திரவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் ஆகியவை லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகளில் முழுமையாக வெளியேற்றப்பட உள்ளது. இவற்றை மூலப் பொருளாகக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகளுக்கு இவை அனுப்பி வைக்கப்படும்.

இதில், ஜிப்சம் கூடுதலான அளவில் இருப்பு இருப்பதால், இதை வெளியேற்ற ஆலைத்தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. ஆலைக்கு மின்சார இணைப்பு ஏற்கெனவே துண்டிக்கப்படுள்ளதால், ஜெனரேட்டர் உதவியுடன் இவற்றை பம்பிங் செய்து லாரிகள் மூலம் வெளியேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்றே இப்பணிகள் துவங்கியுள்ளன. 30 நாள்களுக்குள் முடிக்கப்படும்.” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க