மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் திவாகரன்! - இருவரும் கைகுலுக்கியப் பின்னணி | M.K Stalin And Divakaran met in marriage function

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (02/07/2018)

கடைசி தொடர்பு:17:40 (02/07/2018)

மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் திவாகரன்! - இருவரும் கைகுலுக்கியப் பின்னணி

தஞ்சாவூரில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் திவாகரன் கலந்துகொண்டார். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர்.

திவாகரன்

தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமணம் தஞ்சாவூரில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் துர்கா ஸ்டாலின், உதய நிதி மற்றும் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொள்ள வந்த உதயநிதிக்கு ஸ்டாலினைவிட கூடுதலாக போஸ்டர், பிளெக்ஸ் வைத்து வரவேற்பு கொடுத்தனர் தி.மு.க-வினர். நிர்வாகிகள் பலரும் உதயநிதியைப் புகழ்ந்து பேசினர். நிர்வாகிகள் பலரும் மணமக்களைவிட மகேஷ் பொய்யாமொழி, அவரின் தந்தை அன்பில் பொய்யாமொழியைப் புகழ்ந்து பேசினர். திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்துகள் கூறிவிட்டு மைக் பிடித்த ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இது பொதுக்கூட்டம் போல் நினைத்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என நினைத்து விடாதீர்கள். ஆளும் கட்சியின் செயல்பாடு அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது எனப் பேசினார்.

ஸ்டாலின்

மேடைக்கு கீழே இருந்த திவாகரன் ஸ்டாலின் பேச்சை உன்னிப்பாக கவனித்தார். பேச்சை முடித்தவுடன் கீழே இறங்கிய  ஸ்டாலின் நேராக திவாகரன் அமர்ந்திருக்கும் இடத்துக்குச் சென்றார். உடனே திவாகரன் எழுந்து நிற்க அவரிடம் ஸ்டாலின், ``எப்படி இருக்கீங்க. உடம்பு எப்படி இருக்கு'' எனக் கேட்டு நலம் விசாரித்தார். பதிலுக்கு திவாகரனும் நலம் விசாரிக்க இருவரும் கும்பிட்டுக்கொண்ட பிறகு ஸ்டாலின் கிளம்பினார். அதன் பிறகு மேடைக்குச் சென்ற திவாகரனை மகேஷ் பொய்யாமொழி அழைத்துக் கொண்டு மணமக்களிடம் அழைத்து சென்றார். நீண்ட நேரம் மேடையிலேயே இருந்த திவாகரன் மகேஷ் பொய்யாமொழியிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்.

ஸ்டாலினும் திவாகரனும் சில மணித் துளிகளே சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டாலும் இந்தச் சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தினகரனுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து திவாகரன், `அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகம்' என தனிக் கட்சியை ஆரம்பித்தார். சமயம் கிடைக்கும்போதேல்லாம் தினகரனை விமர்சித்துப் பேசி வருகிறார் திவாகரன். தினகரனை மண்ணை கவ்வ வைப்பதே என் முதல் குறிக்கோள் எனக் கூறி வருகிறார்.18 எம்.எல்.ஏ-க்கள் தீர்ப்பு வந்தபோதுகூட தினகரனின் சூழ்ச்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி என்றார். 'தினகரன் கனவு ஒருபோதும் நடக்காது. நடக்கவும் விட மாட்டேன்' எனக் கூறி வந்த நிலையில், ஸ்டாலின் கலந்துகொண்ட திருமணத்தில் திவாகரனும் கலந்துகொண்டதோடு சந்தித்தும் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திவாகரன், ``மணமக்கள் வீட்டார் இருவரும் எனக்கு நெருங்கிய உறவினர்கள். அதனால் கலந்துகொள்ள வந்தேன். ஸ்டாலின் இங்கு வருவது எனக்குத் தெரியாது. எனக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில்கூட ஸ்டாலின் படம் இடம்பெறவில்லை. இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டோம்'' என தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க