வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (02/07/2018)

கடைசி தொடர்பு:18:00 (02/07/2018)

ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.95,610 கோடி! 

ஜி.எஸ்.டி வரி மூலமாக ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி வரி மூலமாக ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி

இந்தியாவில் ஜி.எஸ்.டி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரி அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாக மத்திய நிதித்துறைச் செயலாளர் ஹாஸ் முக் ஆதியா தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி மூலமாக ரூ.95,610 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மே மாதத்தில் ரூ.94,016 கோடியாகத்தான் இருந்தது. கடந்த 2017-18-ம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அதாவது மார்ச் மாதம் வரையிலான காலத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் சராசரியாக ரூ.89,885 கோடி என்ற அளவில்தான் இருந்தது. இந்தச் சராசரியை ஜூன் மாத ஜி.எஸ்.டி வரி வசூல் தாண்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் முதன் முறையாக ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

ஜி.எஸ்.டி வரி வசூல் குறித்து இடைக்கால நிதியமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ``இ- வே பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், ஜி.எஸ்.டி வரி வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பல மாநிலங்கள் ஜி.எஸ்.டி வரி அமல் செய்வதற்கான சட்ட மசோதாவை வேகமாக நிறைவேற்றி வருகின்றன. ஜி.எஸ்.டி வரி ஒரு வெளிப்படைத் தன்மையை உருவாக்கியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் தாங்கள் எதற்காக வரி செலுத்துகிறோம் என்பதைத் தெரிந்துகொள்கின்றனர். இந்த வரி சீர்திருத்தங்கள் சிறு வியாபாரிகளுக்கும் மற்றும் சிறு தொழில் துறையிலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஜி.எஸ்.டி-யை செயல்படுத்துவதற்கு ஒத்துழைத்த அனைவரும் பாராட்டத்தக்கவர்கள்’’ என்று தெரிவித்தார்.