வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (02/07/2018)

கடைசி தொடர்பு:16:36 (02/07/2018)

மருத்துவக் கலந்தாய்வு இரட்டை இருப்பிடச் சான்றிதழ் உள்ள 90 மாணவர்களுக்கு அனுமதி!

பொதுப்பிரிவுக்கான மருத்துவக் கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது. வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர்களுக்கு இரட்டை இருப்பிடச் சான்றிதழ் காரணமாக மருத்துவக் கலந்தாய்வில் தரவரிசையில் இடம்பிடிக்கவில்லை. இவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள 90 பேர் அனுமதி பெற்றுள்ளனர். 

 மருத்துவக் கலந்தாய்வு

 இன்று (2.7.2018) காலை பொதுப்பிரிவுக்கான மருத்துவக் கலந்தாய்வை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "கலந்தாய்வுக்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதல் நாளில் 598 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டாவது நாளில் 750 பேரும் மூன்றாவது நாளில் 1,000 பேர் என அடுத்தடுத்த நாள்களில் கலந்தாய்வுக்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஏழு நாள்களுக்குள் கலந்தாய்வை முடிக்கவும் திட்டமிட்டு உள்ளோம். அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 3,501 இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டில் 723 இடங்களும் உள்ளன. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கி இருப்பதன் மூலம் கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கின்றன" என்றார்.

மருத்துவக் கலந்தாய்வு

``இந்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் எவ்வளவு பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது" என்ற கேள்விக்கு, "இந்த ஆண்டு கலந்தாய்வில் தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்களில் 70 சதவிகிதம் பேருக்கும் சி.பி.எஸ்.இ மற்றும் இதரப் பாடத்திட்டத்தில் படித்தவர்களில் 30 சதவிகிதம் பேருக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும்" என்றவர், ``இந்த ஆண்டு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இடங்களைத் தமிழ்நாடு மருத்துவக் கலந்தாய்வின் நிர்வாக ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்படுகிறது. இதே கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டு இடங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதன் தீர்ப்பு வெளியான பின்னரே முடிவெடுக்கப்படும். இரட்டை இருப்பிடச் சான்றிதழ் காரணமாக நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் 90 பேர் உயர் நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெற்றுள்ளனர். இவர்கள் தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்" என்றார். 

இரட்டை இருப்பிடச் சான்றிதழ் குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ``உயர் நீதிமன்ற ஆணையின் மூலம் 90 பேர் சேர்க்கப்பட்டதில், 29 பேர் தரவரிசையில் முதன்மையான இடங்களில் உள்ளனர். மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பத்திலேயே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ராணுவம், வங்கி மற்றும் ஆராய்ச்சிப் பணியில் வெளிமாநிலங்களில் பணியாற்றி வந்தால் அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். ஆனால், அதைத் தவிர, இதர பிரிவில் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தை அணுகி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்" என்றார்.

மருத்துவக் கலந்தாய்வு

இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரம் குறித்து மருத்துவச் சேர்க்கை அதிகாரிகளிடம் பேசியபோது, "வெளி மாநிலத்தில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களின் பிள்ளைகள், அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பித்து ஒதுக்கீடு பெற்றிருக்கக் கூடாது. இதை மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்போது உறுதிமொழி கடிதத்தில் எழுதி வாங்குகிறோம். வேறு கல்லூரியில் இடம்பெற்றிருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.