வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (02/07/2018)

கடைசி தொடர்பு:19:40 (02/07/2018)

நீட் தேர்வு தமிழ் வினாத்தாள் குளறுபடி! சி.பி.எஸ்.இ.க்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

போட்டி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இணையான தரமான கல்வி தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

போட்டி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இணையான தரமான கல்வி தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர்.

நீட் தேர்வில் வினாத்தாள்களைத் தமிழில் மொழி பெயர்த்ததில் குளறுபடிகள் அதிகம் இருந்ததால் தமிழ் வழித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.ரங்கராஜன் தொடர்ந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சி.டி.செல்வம் - ஏ.எம்.பஷீர் அகமது முன்பாக இன்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு வினாக்கள் ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழியில் மாற்றம் செய்யும்பொழுது எந்தப் பாடத்தொகுப்பிலிருந்து எடுக்கப்படுகிறது. வினாக்களை ஆங்கில மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்க எந்த அகராதி பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தகவல்கள் தமிழ் வழியில் மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு விளக்க அறிவுரையாக வழங்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆங்கில வார்த்தையை தமிழ் ஆங்கில இலக்கணப்படி எவ்வாறு மொழிபெயர்ப்பது, புரிந்துகொள்வது போன்றவை கற்றுக் கொடுக்கப்படுகிறதா எனக் கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், 4 கேள்விகளுக்கு சி.பி.எஸ்.இ பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.