உணவுதானியங்களை ஏற்றிச்செல்லும் வண்டிகளில் ஜி.பி.எஸ் கருவி - தமிழக அரசு!

நியாயவிலைக் கடைகளுக்கு உணவு தானியங்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும் எனப் பேரவையில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

காமராஜ்


சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைசார்ந்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், `கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் நியாயவிலைக் கடைகளுக்கு உணவு தானியங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் கொண்டுவரப்படும். பொதுவிநியோக திட்டம் முழுமையாக கணினிமயமாக்கப்படும். அதற்காக 330 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என அவர் கூறினார். தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட கொள்கைவிளக்கக் குறிப்பில், தமிழ்நாட்டில் 35,169 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருவதாகவும், இதில் 9,580  பகுதி நேரக் கடைகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் சமூகத்தில் ஒரு அங்கமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு, அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன எனவும், கடந்த மே மாத இறுதிவரை, 1 கோடியே 96 லட்சம் மின்னணு குடும்ப அட்டைகள்  வழங்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் 2,293 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!