வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (02/07/2018)

கடைசி தொடர்பு:19:06 (02/07/2018)

பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த 4 பாதிரியார்கள் மீது வழக்கு பதிவு!

கேரளத்தில் பாவமன்னிப்புக் கேட்க சர்ச்சுக்குச் சென்ற திருமணம் ஆன பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பாதிரியார்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம்

கேரள மாநில கோட்டயம் மாவட்டம், திருவல்லாவில் உள்ள மலங்கரை ஆர்த்தோடெக்ஸ் சிரியன் சபைக்கு திருமணமான பெண் ஒருவர் பாவமன்னிப்புக் கேட்க சென்றுள்ளார். அப்போது, செய்த தவறுகளை அவரின் கணவனிடம் கூறிவிடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் பாதிரியார். அத்துடன் அவர்களின் நண்பர்களான நான்கு பாதிரியார்களும் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 5 பாதிரியார்களும் சபையிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், திருமணமான இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜெய்ஸ் கே. ஜார்ஜ், ஜோப் மேத்யூ, ஜாண்சன் பி.மேத்யூ ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மலங்கரை ஆர்த்தோடெக்ஸ் சிரியன் சபை கவுன்சில் கூட்டம் இன்று மாலை நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.