வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (02/07/2018)

கடைசி தொடர்பு:18:20 (02/07/2018)

`நல்ல செய்தி கிடைத்துள்ளது' - சட்டப்பேரவையில் பூரித்த முதல்வர் பழனிசாமி

`காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் தமிழகத்துக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது' என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூரிப்புடன் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி ஆணையக்குழுத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்கான 30 டி.எம்.சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது. தொடர்ந்து, நீர் பற்றாக்குறை, அணை பராமரிப்பு மற்றும் கொள்ளளவு, தமிழகத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. 

இதனிடையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று உணவுத் துறை மற்றும் கூட்டுறவுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. கூட்டுறவுத் துறை மீதான விவாதத்தின் இடையில் பேசிய முதல்வர் பழனிசாமி, `தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்கு 30 டி.எம்.சி காவிரி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் தமிழகத்துக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி நீர் கிடைக்கும்' என்று பூரிப்புடன் கூறினார்.