சேலத்தை அச்சுறுத்திய ஒருநாள் மழை... 18 மணி நேரமாக சிறுவனை தேடும் போலீஸ்

மழை

சேலத்தில் நேற்றிரவு பெய்த  பேய் மழையால் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாராயணநகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. முகமது ஷாது என்ற 16 வயது சிறுவன் தன் வீட்டுக்கு அருகில் உள்ள மாநகராட்சிக் கழிவு நீர் ஓடையில் இரவு 10.30 மணிக்கு அடித்துச் செல்லப்பட்டான். தற்போது 18 மணி நேரம் கடந்தும் இன்னும் அந்தச் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு மாநகராட்சியின் அலட்சியமே காரணம் என கொந்தளிக்கிறார்கள் அப்பகுதி வாசிகள். 

வீடுகளுக்குள் மழை நீர்

சேலம் மாநகராட்சியின் மையப்பகுதியாக நாராயண நகர் இருக்கிறது. இங்கிருக்கும் ஹவுசிங் யூனிட் `ஏ' பிளாக்கில் குடியிருப்பவர் முகமது ஈஷாக், அவரின் மனைவி முராக் உன்னிஷா இவர்களுக்கு முகமது ஆசிப், முகமது ஷாது (16) என இரண்டு மகன்கள். முகமது ஷாது நேற்று மாலை சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது கனமழை காரணமாக சாலை முழுவதும் வெள்ளக்காடாக இருந்துள்ளது. அப்போது மாநகராட்சிக் கழிவுநீர் ஓடையில் விழுந்த அவரை தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது. இந்தக் கழிவுநீர் ஓடை சேலம் திருமணிமுத்தாற்றோடு கலக்கிறது. அதனால் நகர் முழுவதும் காவல்துறையினரும், மாநகராட்சி ஊழியர்களும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர் பேச முடியாமல் ஆழ்ந்த துன்பத்தில் இருந்து வருகிறார்கள்.

இதுபற்றி அந்தப் பகுதியைச் சேர்ந்த சதாம் உஷேனிடம் பேசியபோது, ``நேற்று மாலை நான், முகமது ஷாது, அப்துல் ஜாபத் ஆகியோர் சினிமாவுக்குப் போயிட்டு வந்தோம். கனமழை பெய்துகொண்டிருந்தது. ஓரமாக வீட்டுக்குப் போய் விடலாம் என்று நினைத்து போய்க்கொண்டிருந்தோம். திடீரென முகமது ஷாது தண்ணீரில் விழுந்துவிட்டான். அவனை மீட்பதற்காக நானும் தண்ணீரில் குதித்தேன். அவனைக் காப்பாற்ற முடியவில்லை. நான் கான்கிரீட் தளத்தைப் பிடித்துக் கொண்டதால் தப்பித்தேன்'' என்றார்.

வீடுகளுக்குள் மழை நீர்

 

இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த போயர் சங்க முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாணிக்கம், ``இப்பகுதி சேலம் மாநகராட்சியின் 42-வது வார்டு. இங்கு சாதாரணமாக மழை பெய்தாலே மாநகராட்சிக் கழிவு நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இப்பகுதி முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிப்பதோடு வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துகொள்ளும். மழை பெய்யும் நேரத்தில் இப்பகுதியில் நடமாடும் யாருக்கும் உயிருக்கு உத்தரவாதம்  இல்லை. இதுபற்றி மாநகராட்சிக் கமிஷனர், கலெக்டர், தொகுதி எம்.எல்.ஏ. என எல்லோரிடமும் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை பெய்யும்போது எங்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெளியில் வந்து இந்த வழியாகச் செல்பவர்களைப் பத்திரமாக அழைத்துச் சென்றுவிடுவோம். 3 வருடத்துக்கு முன்பு ஒரு டாக்டர் குடும்பத்தையே அடித்துக்கொண்டு போனது. நாங்க ஓடிப் போய் காப்பாற்றினோம். நேற்று நாங்கள் வந்திருந்தால் காப்பாற்றி இருப்போம். மாநகராட்சியின் அலட்சியமே இதற்கு காரணம்'' என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!