வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (02/07/2018)

கடைசி தொடர்பு:20:20 (02/07/2018)

`அலட்சியம் வேண்டாம்; உயிரைக் காப்பாற்றுங்கள்’ - கலெக்டரிடம் பொங்கிய டி.டி.வி கட்சியின் மாவட்டச் செயலாளர்

சுண்ணாம்புக்கல் சுரங்கங்களிலிருந்து வெளியில் வரும் லாரிகளால் பல்வேறு விபத்துகள் நடக்கின்றன என்று அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இனியும் நாங்கள் பொறுக்க மாட்டோம் என்று ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன். 

                                        

அரியலூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகளும் 165-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்களும் செயல்பட்டுவருகின்றன. இங்கு உற்பத்தி செய்யும் சிமென்டுகளை வெளிமாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காகப் பல மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதீத வேகம், அரசு அனுமதித்த அளவைவிட பாரத்தை ஏற்றிச் செல்வதால் மாவட்டத்தில் பல்வேறு விபத்துகள் நடக்கின்றன என்று ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களும் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில், அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரம்பலூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், ஆட்சியர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், செந்துறை பகுதியில் இயங்கி வரும் சிமென்ட் ஆலைகளுக்கு அருகில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கங்களிலிருந்து லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

                                

அவ்வாறு கொண்டு செல்லப்படும்போது, லாரிகளின் வெளிப்பகுதி மற்றும் டயர்களில் ஒட்டிவரும் மண் சாலைகளில் சிந்துவதால் சாலை முழுவதும் மண்ணாகி, பின்னர் புழுதியாகப் பறக்கிறது. இதன் காரணமாக விபத்துகள் அதிகமாக நடப்பதால், சுரங்க விதிகளின்படி சுரங்கங்களிலிருந்து சுண்ணாப்புக்கல் ஏற்றி சாலைக்கு வரும் லாரிகளைக் கழுவி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், செந்துறை நகரில் சாலையின் இருபுறமும் மூடியுடன்கூடிய வடிகால்வசதி செய்து தர வேண்டும். இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் மக்களின் உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று கலெக்டரிடம் கூறியுள்ளார்" எனத் தெரிவித்தார்.